திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத் தில் இதுவரை 11 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு நடைபெற்றது.
இது தொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் முரளி கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்தில் இதுவரை 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவரும் குணமடைந்து வீடு திரும்ப இருக்கிறார். காய்ச்சல் பாதிப்பு மாவட்டத்தில் இன்னமும் அதிகரிக்கவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் தங்களது வீடுகளின் அருகில் டயர்கள், ஆட்டு உரல்கள் உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகாத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சிய நீரை பருக வேண்டும்” என்றார்.
தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், சமூகத்துடன் இணைந்து டெங்கு கொசுவை கட்டுப்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் முத்துவேல், மாநகராட்சி நல அலுவலர் (பொ) கலைச்செல்வன், பொது சுகாதார ஆய்வாளர் கோகுல், சுகாதார அலுவலர்கள் முருகன், ராஜேந்திரன், பிச்சை உட்பட பலர் பங்கேற்றனர்.