கே.என்.நேருவுக்கு என்ன பிரச்சினை? -பதில் சொல்கிறார்  திருச்சி எம்பி திருநாவுக்கரசர் 


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

திருச்சி தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்கூட்டியே வந்து நேரு காத்திருக்க, தாமதமாக வந்த வேட்பாளர் திருநாவுக்கரசர், "பெரியார், அண்ணா, கருணாநிதி வழிவந்தவர் கே.என்.நேரு. அதனால அவங்க பங்க்சுவாலிட்டியா இருக்கலாம். ஆனா, நாங்க எம்ஜிஆரைப் பின்பற்றி வந்தவங்க. நாங்க கொஞ்சம் முன்னபின்னத்தான் இருப்போம். பொறுத்துக்கணும்" என்று சிரித்தபடி சொன்
னார். கட்சி நிர்வாகிகளிடம் எரிந்து விழுந்த நேருவைப் பார்த்து, "பொதுவா வயசாக வயசாக மனுஷனுக்கு நாய்குணம் வந்திடும். எங்கள மாதிரி 70 வயசுக்கு மேல தான் மறுபடியும் மனுஷனா மாறுவார்" என்று பொது மேடையில் கிண்டல் செய்ததும் அதே திருநாவுக்கரசர்தான். இப்போது, “காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்குத் தூக்கியது போதும்” என நேருவின் ஆட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. என்ன சொல்கிறார் திருநாவுக்கரசர்? பேசலாம்.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டாலும் எம்ஜிஆர் பெயரைச் சொல்லி ஓட்டுக்கேட்டவர் நீங்கள். ரயில் பயணத்
தின்போது, ‘பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில்வே நிலையம்’ என்று சொல்கிறபோது எப்படி உணர்ந்தீர்கள்?


மகிழ்ச்சிதான். ஏற்கெனவே காமராஜர், அண்ணா பெயரில் விமான நிலையங்கள் இருக்கு. அதேமாதிரி எம்ஜிஆரும் முக்கியத் தலைவர்ங்கிற முறையில அவரோட பேரையும் சூட்டியிருக்காங்க. அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

``2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி ரஜினி கட்சி தொடங்குவார்'' என்று தமிழருவி மணியன் சொல்கிறார். ``இன்
னொரு எம்ஜிஆராக ரஜினி உருவெடுப்பார்'' என்று துக்ளக் குருமூர்த்தி சொல்லியிருக்கிறார். உங்களுடைய நண்பர் ரஜினி... நீங்கள் என்ன சொல்றீங்க?


நட்பு வேற, அரசியல் வேற. கட்சி தொடங்குற விருப்பத்தை அவரே தெரிவிச்சிருக்காரு. சமீபத்தில் கூட அவங்க அண்ணனும் அதை உறுதிப்படுத்தியிருக்காரு. நண்பர்களிடமும் இதே கருத்தைச் சொன்னதாகச் சொல்றாங்க. ஆனாலும், அவர் எப்ப கட்சி தொடங்குவார் என்பது அவர் தொடங்குனாத்தான் தெரியும். நண்பர் தான் என்றாலும்கூட, நான் சொல்றதால அவர் கட்சி தொடங்கப்போறதுமில்லை, நான் வேண்டாம்னா அவர் கட்சி தொடங்காம இருக்கப் போறதும் இல்ல. அது அவருடைய சவுகரியம், அவருடைய இஷ்டம் சார்ந்தது. எனவே, அவருடைய அரசியல் பற்றி இப்போதைக்கு கருத்துச் சொல்ல விரும்பல.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாததுதான் தோல்விக்குக் காரணம் என்று காங்கிரஸார் எல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், பாரம்பரியமான அமேதி தொகுதியிலேயே ராகுல் தோற்றுவிட்டாரே?

எதிர்க்கட்சிகளுக்குள் ஒரு உடன்பாடான கருத்து ஏற்படாததும், ராகுல்காந்தியை எல்லோரும் சேர்ந்து பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தாததும் இந்தத் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. அண்ணா கூடத்தான் சொந்த ஊரான காஞ்சியில் தோற்றிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோற்றிருக்கிறார். இந்திராகாந்தி அம்மாவும் தோற்றிருக்காங்க.

தொடர்ந்து 40 வருஷமாக மக்களுக்கு வேலை பார்த்த நான்கூடத்தான் என் தொகுதியில் தோற்றிருக்கிறேன். நான் பெரிய தலைவர் இல்லை என்றாலும், தொடர்ந்து 6 முறை அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவன். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். ஒரே ஒரு முறை தோற்றுவிடுவதால் அவருக்கு அந்தத் தொகுதியில் செல்வாக்குப் போய்விட்டதென்றோ, மக்கள் ஏற்கவில்லை என்றோ அர்த்தமில்லை. அடுத்த தேர்தலில் வயநாட்டைவிட பெரிய வெற்றியை அவர் அமேதியில் பெறுவார்.

x