யாதும் ஊரே... யாவரும் கேளிர்... பூங்குன்றனார் பாடலை பூரிக்கவைத்த தமிழர்!


எம்.சோபியா
readers@kamadenu.in


 

முதல்முறை கேட்கும்போதே மனதில் ஒட்டிக்கொள்கிறது, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலின் நவீன வடிவம். சிகாகோவில் நடக்கவிருக்கும் 10-வது உலகத் தமிழ் மாநாட்டிற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், பல்வேறு இசை வடிவங்களின் கலவையில் ஃப்யூஷன் நீரூற்றாகப் பொங்கிவழிகிறது. ஆப்பிரிக்கக் குரலிசை, ராக், ராப், பாப், அரேபிய, சீன இசை வடிவங்களுடன் நமது கர்நாடக இசையும் நாட்டுப்புற இசையும் கலந்து செவிகளை நனைக்கின்றன. சர்வதேசக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலைக் காட்சி வடிவில் பார்க்கிறபோது, ஓரிரு நொடிகளுக்குள் உலகையே சுற்றிவிட்டு, எல்லோரையும் உறவினராக்கிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்த உணர்வு வருகிறது.

பாடலுக்கு இசையமைத்த ராஜன் சோமசுந்தரம் அமெரிக்க வாழ் தமிழர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் ராலே நகரில் வசிக்கும் அவரை மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொண்டேன். அவருக்கு இரவும், நமக்குப் பகலுமான ஒரு இனிய பொழுதில் அவரிடம் உரையாடியதிலிருந்து...

அசத்தல் இசையைத் தந்து தமிழர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்கள். உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்…

பூர்வீகம் திருவாரூர். பொறியியல் படித்து அமெரிக்காவில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இளம் வயதிலேயே கற்றுக்கொண்ட கர்நாடக சங்கீதம்தான் இன்றைக்கு எனக்கு ஒரு அடையாளத்தைத் தந்திருக்கிறது. நான் பணியாற்றிய நிறுவனத்தில் இசைக்குழு ஒன்றைத் தொடங்கி நடத்திவந்தேன். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் வென்று இசையமைப்பாளராக அறிமுகமானேன். அமெரிக்க சுற்றுலாத் துறை விளம்பரப் படத்துக்கு இசையமைத்திருக்கிறேன். இப்போது உலகத் தமிழ் மாநாட்டுப் பாடலுக்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம்.

x