மழைக்காக ஆட்சியர் போட்ட ரூட்டு!
மழை வேண்டி ஆளும்கட்சியினர் நடத்தும் யாக வைபவங்கள் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மழைக்காக புது ரூட்டில் பயணிக்கிறார். மாவட்டத்தில் மொத்தம் 470 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இங்கெல்லாம் மழைக்காக முப்பது நாட்கள் சிறப்புப் பிரார்த்தனை செய்ய அறிவுறுத்தி இருக்கிறார் ஆட்சியர் கந்தசாமி. இந்தப் பிரார்த்தனையைக் கடந்த 25-ம் தேதி தானே முன்னின்று தொடங்கி வைத்தார். தினமும் காலையில் பள்ளிகளில் நடக்கும் வழிபாட்டுக் கூட்டத்தில் திருக்குறளில் உள்ள ‘வான் சிறப்பு’ அதிகாரத்தில் உள்ள குறள்களை மாணவர்கள் உரக்கப் படிக்க வேண்டும் என்பதுதான் கந்தசாமி மழைக்காகத் தொடங்கி வைத்திருக்கும் பிரார்த்தனை. “யாகம் நடத்தினால் மழை பொழியுமா?” என்று கேட்டவர்கள், “குறள் படிச்சா மழை வருமா?” என்று கேட்க முடியாமல் நிற்கிறார்கள்.