விளையாட்டு மைதானத்தை மீட்டு தர காவல் நிலையத்தில் சிறுவர், சிறுமியர் முறையீடு @ புதுச்சேரி


புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் உள்ள காலி இடம் ஒன்றில் விளையாட்டு மைதானம் அமைத்து கடந்த 2018-ம் ஆண்டு முதல் சாஃப்ட் பால், பேஸ் பால், தக் ஆப் வார், பவுன்ஸ், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தினந்தோறும் சிறுவர், சிறுமியர் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வழிநடத்துகின்றனர். இங்கு பயிற்சி பெறும் சிறுவர், சிறுமியர் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பெற்று வருகின்றனர்.

இது அவர்களின் உயர்கல்விக்கு உறுதுணையாக உள்ளது. இந்நிலையில் சிறுவர், சிறுமியர் பயன்படுத்தி வரும் இடம் பாகூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் கையகப்படுத்தி அப்பகுதியை மனைப்பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர், சிறுமியர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் இன்று கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் குவிந்த அவர்கள் அந்த இடத்தை மனை பிரிவுகளாக மாற்ற கூடாது என வலியுறுத்தினர். தொடர்ந்து இது சம்பந்தமாக புகார் மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர்.

இது குறித்து சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் கூறும்போது, கிருமாம்பாக்கத்தில், விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. இதனால் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள முடியவில்லை. இங்குள்ள காலி இடத்தில் மைதானம் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகின்றோம்.

அந்த இடத்தையும் சிலர் மனை பிரிவுகளாக மாற்ற முயற்சிக்கின்றனர். எனவே, இந்த இடம் யாருக்கு சொந்தமானது என வெளிப்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள தனியாக இடம் ஒதுக்கி விளையாட்டு மைதானம் அமைத்து தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.