நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை மதியம் முடித்தார். அவர் திருவள்ளுவர் சிலையை வணங்கிய பின்பு கடலில் இருந்து படகில் கரை திரும்பினார்.
3 நாள் தியானம்: இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30ம் தேதி இரவு தியானத்தை தொடங்கினார். 3-வது நாள் தியானத்தில் சனிக்கிழமை ஈடுபட்டார். விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி அதிகாலையில் சூரிய உதயம், நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வந்தார். வெள்ளிக்கிழமை மாலையில் தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி சூரியன் மறையும் அஸ்தமன காட்சியை பார்வையிட்டு வணங்கினார். பின்னர் மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார்.
சூரிய வழிபாடு: விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து இன்று அதிகாலை 5.40 மணியளவில் காவி உடையுடன் வெளியே வந்தார். அவர் சூரிய உதயத்தை பார்த்தது, வழிபாடு செய்தார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தின் பிரதான பாதையில் உள்ள படிக்கட்டுகளில் இருமுறை மேலும், கீழும் ஏறி இறங்கி நடைபயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் பகவதியம்மனின் ஸ்ரீபாத மண்டபம், விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டார். பின்னர் காலை 7.30 மணியளவில் தியான அறைக்கு சென்று மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் தியானத்தில் அமர்ந்து மதியம் 1 மணிக்கு தியானத்தை முடித்தார். 3 நாட்களில் பிரதமர் மோடி 40 மணி நேரம் தியானம் மேற்கொண்டார். கடந்த 30-ம் தேதி இரவு 7 மணிக்கு தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு தியானத்தை முடித்தார். இடை இடையே அவர் ஓய்வு எடுத்து கொண்டார்.
தியானம் நிறைவு: தியானத்தை நிறைவு செய்த அவர், தியான அறைக்கு அருகே உள்ள அறையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். பின்னர் பிரதமர் மோடி வெளியே வந்து விவேகானந்தா மண்டப படிக்கட்டில் நின்றவாறு கேந்திரா நிர்வாகிகள், ஊழியர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்து கொண்டு அவர்களிடம் கையசைத்தவாறு விவேகானந்தர் பாறையில் இருந்து விடைபெற்றார். பின்னர் தனி படகு மூலம் மதியம் 2.50 மணியளவில் அருகே உள்ள திருவள்ளுவர் பாறைக்கு சென்றார். மதியம் 2.55 மணிக்கு திருவள்ளுவர் கால் பாதத்தில் ரோஜா பூ மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் சிலை: பின்னர் திருவள்ளுவர் பாறையில் இருந்து இறங்கி மாலை 3.10 மணியளவில் ‘விவேகானந்தா’ என்ற படகில் ஏறி படகு தளத்தின் கரை பகுதிக்கு 3.20 மணிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு சுற்றுலா மாளிகைக்கு 3.26 மணிக்கு வந்து சேர்ந்தார். சுற்றுலா மாளிகையில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளுடன் 25 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். மாலை 3.56 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாப்பிற்கும் இரு ஹெலிகாப்டர்கள் என மொத்மத் 3 ஹெலிகாப்டர்கள் சென்றன. திருவனந்தபுரத்திற்கு சென்ற பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
பாதுகாப்பு பணி: பிரதமர் மோடி இன்று விவேகானந்தர் பாறையில் இருந்து புறப்பட தயாரான போது கடற்படை ஹெலிகாப்டர்கள் விவேகானந்தர் பாறை, மற்றும் கடல் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக ரோந்து சுற்றியவாறு பாதுகாப்பில் ஈடுபட்டன. இதைப்போன்று கடலோர காவல்படையின் இரு கப்பல்கள் ஆழ்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் 15க்கும் மேற்பட்ட மெரைன் நவீன படகுகள் விவேகானந்தர் பாறை, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடலில் சுற்றியவாறே இருந்தன. மீனவர்களின் விசைப்படகுகளிலும் மெரைன் போலீஸார் சென்று கடலுக்குள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
சகஜ நிலை திரும்பியது: மோடி புறப்படுவதை முன்னிட்டு கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் மதியம் 1 மணியில் இருந்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதைப்போல் காலை 11.30 மணியில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மோடியின் 3 நாள் தியானத்தை முன்னிட்டு கன்னியாகுமரி 3000-க்கும் மேற்பட்ட போலீஸார், இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், போட்டோ கிராபர்கள் என பரபரப்பாக பாதுகாப்பு வளையத்தில் காணப்பட்டது. மோடி திருவனந்தபுரம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதாவது மாலை 4 மணியில் இருந்து கன்னியாகுமரி முழுவதும் பாதுகாப்பு தளர்த்தப்பட்டு சகஜநிலைக்கு வந்தது.