கடவுள் கணக்குகள் புரிவதில்லை- சோ.சுப்புராஜ்


சிவகாமியின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. குனிந்து அமர்ந்திருந்தவளின் கைகள், கண்ணீரிலும் வியர்வையிலும் பிசுபிசுத்த கன்னத்தைத் தாங்கியிருந்தன. தாமரையின் திருமணம் நின்றுபோனதற்காக அழுவதா, அத்தனை அன்பைக் கொட்டிய ஜெயசீலிக்காக அழுவதா என்று புரியாமல் நிலைகுலைந்திருந்தாள்.

சென்னையை மூழ்கடித்த டிசம்பர் வெள்ளத்தின்போதுதான் சிவகாமியின் குடும்பமும், ஜெயசீலியின் குடும்பமும் ஒன்றுக்கொன்று அறிமுகமாகியிருந்தன. அடித்துச் சென்ற வெள்ளத்தில் உடைமைகளை இழந்த பல குடும்பங்கள், ஒரு பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்தன. அரையிருட்டும் கசகசப்புமாக இருந்த அந்த வகுப்பறையில் ஜெயசீலியும் சிவகாமியும் அறிமுகமாகி, பரஸ்பரம் தங்கள் இழப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான், இருவரின் குடும்பங்களும் தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் அடுத்தடுத்த தெருக்களில் வசிப்பது தெரியவந்தது. நீண்டநாள் பழகியவர்களைப்போல் மனசளவில் நெருங்கியிருந்தனர் இருவரும்.

ஜெயசீலியின் குடும்பத்தில் அவள், கணவன் தாமஸ், எட்டு வயது மகள் பிலோமினா என்று மூவர். சிவகாமியின் குடும்பத்தில் அவள், அவளுடைய மாமியார், கணவன் தங்கப்பன், மகள் தாமரை என்று நான்கு பேர். சிவகாமியின் மாமியார் வெள்ளத்தில் சிக்கி இறந்துபோக மிஞ்சியது மூவர்தான். மாமியாரின் மரணம் சிவகாமியைக் கலங்கவைத்திருந்தது.

இயற்கையின் ஆகிருதிக்கு முன்னால் மனித ஜம்பமெல்லாம் தூசுக்குச் சமம் என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்லிச் சென்றிருந்தது அந்தப் பேய் வெள்ளம். ஆனால், சக மனிதருக்குக் கைகொடுக்கும் மனிதமும் வெள்ளமெனப் பெருகி, உடைந்து நின்றவர்களைச் சுற்றி அரவணைத்துக்கொண்டது. நிவாரண முகாமிற்கு எங்கெங்கிருந்தோ உதவிகள் வந்து குவிந்தன. முகம் தெரியாத மனிதர்களின் ஈர மனங்கள், துயரத்தில் ஆழ்ந்திருந்தவர்களை ஆதூரமாக வருடிக்கொடுத்தன.

x