மிரட்டும் ஓவியம்!


ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

ரஷ்ய ஓவியங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த ஓவியம் இது. தந்தையே மகனைக் கொல்வதைச் சொல்லும் இந்த ஓவியம் கொடூரத்தின் உச்சம். 19-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான ரஷ்ய ஓவியர்களில் ஒருவரான இல்யா ரெபின் வரைந்த இந்த ஓவியம் பார்ப்பவர்கள் அனைவரையும் மிரள வைத்தது. இது பல சர்ச்சைகளையும் கிளப்பியது. இதனாலேயே இந்த ஓவியத்தை இரண்டு முறை அழிக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன.

இந்த ஓவியத்தில் மகன் இரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்க, தந்தை ரத்தம் வழியும் மகனின் தலையை அழுத்திப் பிடித்தபடி அமர்ந்திருக்கிறார். இந்தக் காட்சி மிகப்பெரிய மாளிகை ஒன்றின் பிரம்மாண்ட அறையில் நிகழ்கிறது. அந்த அறையில் உள்ள பொருட்களை ஆராய்ந்தால் இந்தக் காட்சி அரங்கேறுவதற்கு முன் ஏதோ ஒரு கலவரம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. நாற்காலி ஒன்று குப்புற விழுந்துகிடக்கிறது. தரை விரிப்பு தடுக்கி விழும்போது மடிந்திருக்கக் கூடும். இறந்து கிடக்கும் மகனின் கால் அருகில் குத்தீட்டி ஒன்று கிடக்கிறது. அறையில் ஒரு பக்கம் முழுக்க இருள் சூழ்ந்திருக்க தந்தை மகன் மீது மட்டும் வெளிச்சம் பாய்கிறது. தந்தை இவான் கருப்பு நிற அங்கியையும், அவரது மகன் விலை உயர்ந்த பிங்க் நிற இரவு அங்கியையும் அணிந்திருக்கிறார். மகனின் கால்களில் டீல் பச்சை நிற காலணியையும் அணிந்திருக்கிறார். அறையில் உள்ள கட்டமைப்புகள், மரப் பொருட்கள் அனைத்தும் 17-ம்  நூற்றாண்டைச் சேர்ந்தவையாக உள்ளன.

ஆரம்பத்தில், உயிரிழந்த மகனைக் கட்டிப்பிடித்தபடி தந்தை ஆற்றாமையில் குமுறுவதை போலவே இந்த ஓவியம் புரிந்துகொள்ளப்
பட்டது. ஆனால், தந்தையின் முக பாவனைகளைக் கூர்ந்து கவனித்தவர்கள் அதில் வெளிப்படும் குரூரத்தையும் கோபத்தையும் உணர்ந்தார்கள். அதன்பொருட்டே மகனை அவர் கொன்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். மகன் இல்லாத நிலையில் அவர் இந்தப் பேரரசின் கடைசி அரசனாக எஞ்சியிருக்கும் அபாயத்தையும் உணர்வதாகத் தெரிகிறது.    

ரஷ்ய பேரரசராக இருந்த இரண்டாம் அலெக்சாண்டரின் படுகொலை, நிகோலாய் ரிம்ஸ்கி கோர்சகாவ் என்ற இசையமைப்பாளரின் இசை, காளை சண்டை ஆகிய மூன்றையும் இணைக்கும் பின்னணியில் இந்த ஓவியத்தை வரைந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் இல்யா ரெபின். அதேசமயம் 1581-ல் இவான் இவனோவிச் அரசரின் மகனும் இளவரசனும் ஆன திசாரேவிச் இவான் மரணித்த சம்பவம் வரலாற்றில் பெரிய சர்ச்சையைக் கிளப்பிருந்தது. இளவரசன் மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற கேள்விக்கு பதிலே இல்லை. இந்த நிலையில் ரெபின் வரைந்த இந்த ஓவியம் இவான் என்ற பெயரோடு வெளிவந்தநிலையில் இது ரஷ்ய மக்களிடையே விவாதத்தைக் கிளப்பியது. 

ரஷ்ய கலை உலகில் இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற நாவலாசிரியரும் தத்துவவியலாளருமான லியோ டால்ஸ்டாயுக்கு நிகரான புகழை ரெபினும் அடைந்திருக்கிறார். உலகப் புகழ் டால்ஸ்டாய் ஓவியத்தை வரைந்ததும் இவர்தான்.

ரெபின் இந்த ஓவியத்தை பாவெல் ட்ரெட்யகோவ் என்ற செல்வந்தருக்கு விற்றார்.  பாவெல் கலைப் பொருட்களைச் சேகரிக்கும் கலை ஆர்வலர். இவர் தனது சேகரிப்புகளைக் காட்சிப்படுத்தவே ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கினார். அந்த ட்ரெட்யகோவ் அருங்காட்சியகம் இன்றும் மாஸ்கோவில் உள்ளது. அங்கு இன்றும் இந்த ஓவியம் பார்வையாளர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது!

x