சிறுகதை: பெருமாயி


மதுரை ஒ.முருகன்
omuru1969@gmail.com

“முத்து நல்லாருக்கியாப்பா, யாருப்பா இது... ஓம் பேரம் பேத்திகளா..? ”

குலசாமி கோயிலுக்கு மாசிப்பச்சை போட வந்த முத்துராசுக்கிட்ட பக்கத்துவீட்டுப் பொன்னயா கேட்க, “ஆமா சித்தப்பா...”ன்னு சொல்லிக்கிட்டே கார்ல இருந்த பையிகள எடுத்துக்கிட்டு, பூட்டியிருந்த வீட்ட தொறந்து உள்ள போனாக.

முத்துராசு தம்பிக முக்கியமான வேல இருக்குன்னு, “தெசய நோக்கி நம்மசாமிய கும்பிட்டுக்குறோமிண்ணே, நீங்க போயிட்டு வாங்க” ன்னு சொல்லி அனுப்பிட்டாய்ங்க. முத்துராசு, தம் பேரம் பேத்திகள மொத மொறயா சொந்தஊருக்குக் கூட்டிக்காந்
திருக்காரு.

வீட்டுக்குள்ள சுவத்தில மாட்டியிருந்த போட்டோ ஒவ்வொண்ணயும், உத்து உத்துப் பாத்துட்டிருந்த மூத்த புள்ள பவானி,
“தாத்தா... இந்த போட்டோவில இருக்கிறது யாரு?” பெருசா சுவத்திலமாட்டியிருந்த கருப்பு வெள்ள போட்டோவப் பாத்து பேத்தி கேட்டதும், போட்டோவப் பாத்த முத்துராசு அமைதியாகிட்டாரு.

“ஏந்... தாத்தா மொகமெல்லாம் கோரமா இருக்கு, யாரு இவுங்க? ”

‘சிவீர்ன்னு' அம்புட்டு அழகா இருந்த, தன் தாயோட மொகம் கோரமானதநெனச்சு கண்கலங்கிய முத்துராசு, “இது என்னப் பெத்த ஆத்தாம்மா... உங்கஅப்பனுக்கு அப்பத்தா... ஒங்க பாட்டிம்மா”ன்னு சொல்லும்போதே ‘பொலபொல'ன்னு கண்ணுல தண்ணி வந்திருச்சு.

பெருமாயி, கந்தராசுக்கு வாக்கப்பட்டு வந்த நேரம், வச்ச வெள்ளாம வீண் போகல, போட்டதெல்லாம் பொன்னா வெளஞ்சுச்சு. கல்யாணமான ஆறுவருசத்துக்குள்ள வருசையா மூணு புள்ளைக, நாலாவதும் ஆம்புள புள்ள பெறந்து, முழுசாமூணு நாக்கூடா ஆகல,
அம்மாவாசை அன்னைக்கு ராத்திரி, கடலக் காட்டுல தண்ணி பாய்ச்சப் போன கந்தராசு காட்டுலயே செத்துக்கிடந்தாரு. விரியம் பாம்பு கடுச்சுப்புடுச்சாம்.

இப்பிடிப் படக்குன்னு கந்தராசு செத்தது பெருமாயிக்கு இடி விழுந்தமாரியிருந்துச்சு, என்ன செய்றதின்னே தெரியல, சுவத்துல முட்டி மோதி அழுகுறா, “அழுகாதத்தே.., பச்சப்புள்ளக்காரி இப்படி அழுதாஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகிப்போகாதா… அழுகாத” ஆறுதல்
சொன்ன ராமாயி, கையோட கொண்டுக் காந்த புளிச்சத் தண்ணிய குடுத்துக் குடிக்கச் சொன்னா.

“அம்புட்டெழுரோட இருக்கும்போதே, கொஞ்ச நஞ்ச எடஞ்சலா பண்ணாய்ங்க, அந்த மனுசன் இல்லாம எம்புள்ளகளயும், என்னயும்  எப்படிப் பொழைக்கவிடப் போறாய்ங்களோ” சொல்லிச் சொல்லி அழுதா.

“யாத்தே... அப்பன முழுங்கிட்டுத்தான் பெறப்பேன்னு வரம் வாங்கிவந்திருக்கும்போல... வரக்காலம் புடுச்சதுக, பொறந்த மூணாம் நாளேபெத்தவ தாலிய அறுத்துப்புடுச்சே...” நெஞ்சுல அடிச்சுக்கிட்டே செவந்தம்மா வீதியில, சத்தமா சொல்லிட்டு போறா.

துணியில விரிச்சுப் படுக்கப் போட்டுருந்த கொழந்தயப் பாத்தா பெருமாயி. ஒண்ணுந் தெரியாத அந்த பச்சக் கொழந்த விட்டத்தப் பாத்து, கையக்கால ஒதறிக்கிட்டு இருக்கு.

“விதிமுடிஞ்சு போச்சு... அதான் விரியம் பாம்பு கடிச்சிருச்சு, இனிமேலு நடக்கவேண்டியத பாரும்மா” மொக்கக்காள தெம்பு சொல்ல.
“எத்தன நாளைக்குத்தான் இப்படியே மூக்கச் சிந்திக்கிட்டுருப்ப, போனதுபோச்சு… இருக்குறத காப்பாத்த வேணாமா? ஆக வேண்டியத பாரு” பெரியாம்பள அடுத்த என்னா செய்யணும்ன்றத சொல்லாம சொல்லிட்டுப்போனாரு.

பதினாறாம் நாளு காரியமும் முடிஞ்சு போச்சு, பெருமாயிக்கு இன்னும் சூட்டிப்பு வரல. வீட்டுக்குள்ளயே மொடங்கிக் கெடக்கா.
“எந்திரிச்சு மூஞ்சிய கழுவு, ஓம் புள்ளைகளுக்கு இனிமே யாரு இருக்கா? நீதான பாக்கணும்” பொட்டியம்மா அழுத்தமா சொன்னது மண்டைக்குள்ளயே சுத்திச் சுத்தி வந்திச்சு.

‘நாலு புள்ளைகளயும் மின்னேத்தி... நல்லா பொழச்சா பெருமாயின்னு பேருவாங்கணும்’ மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு வைராக்கியத்தோட எந்திரிச்சா.

விரிச்சுக் கெடந்த தலமுடிய அள்ளி முடிஞ்சு கொண்ட போட்டா. சேலமுந்தானய ஒதறி இடுப்பில சொருகினா, கட்டுத்தொறயில கட்டியிருந்த ரெண்டு மாட்டயும் கழத்தினா, துண்டெடுத்து சும்மாடுகூட்டி, சால் வடத்ததலையில வச்சு தோட்டத்துக்குப் போனா.

வடக்கு தெசையப் பாத்து, “பேச்சி...ராக்கு.. பெரிய கருப்பா... நீங்கதான்ப்பா தொண செய்யணும்” சாமிய கும்பிட்டு , மண்ணெடுத்து நெத்தியல பூசிக்கிட்டா.

எந்தக் கடலக்காட்டுல புருசன பறிகொடுத்தாளோ, அதே கடலக் காட்ல, வெள்ளாம செஞ்சு பொழச்சுக் காட்டணும்ன்னு, கமல எறைக்க ஆரம்பிச்சா.

நொட்டாங் கையில மாட்டுப் புடி கயித்தயும், சோத்துக் கையில வால் கயித்தயும் தோதா புடிச்சு, முன்னாலயும் பின்னாலயும் மாட்ட ஓட்டி, வடக்கயித்தில தோதா ஒக்காந்து கமலயில தண்ணி எறைக்கிறத பாத்த ஊரே மெச்சப்பேசிச்சு.

மொத்தல்ல, “அம்புட்டுத்தானப்பா... இவ எங்கிட்டுப் பொழைக்கப்போறா... நெல பொலத்த விட்டுட்டு, தேசாந்தரம் போக வேண்டியதுதா”ன்னு பேசுன அங்காளி பங்காளிக, பெருமாயி இம்புட்டு தாட்டியமான பொம்பளயா இருப்பாண்டு, கொஞ்சங்கூட நெனச்சுப் பாக்கல.

ஊருக்கும் வடக்க மொண்டிக் கரட்டுக்கும் கீழ, பெரிய கம்மாமடத் தண்ணி, சிலுசிலுன்னு ஓடுற சின்ன ஓடய ஒட்டி இருக்கிற கமலக் கெணறு தோட்டம் தான் இது.

கந்தராசுக்கு மட்டுமில்ல, அவுக சித்தப்பன் பெரியப்பன் மகன்களுக்கும் இந்த கெணத்துலதான் தண்ணிப்பங்கு, அவுங்கவுங்க பங்கு தண்ணிக்குத் தக்கன வெள்ளாம செய்யணும்.  உண்டனா வெள்ளாம செய்யணுமுன்னு நெனச்சா, கமலைக்குத்தான் ஆபத்து. அடிதடியாகி சாலக் கிழிச்சுப்புடுவாங்க, இல்ல கமல மரத்த ஒடச்சுப்புடுவாங்க.

ரெண்டுல எது நடந்தாலும் தண்ணி எறைக்க முடியாது. வெள்ளாம காய்ஞ்சுபோகும். அதுக்கு பயந்துக்கிட்டு ஆளுக்கொரு நேரம் மொறவச்சு தண்ணி பாச்சணும்.

சின்னஞ் சிறுசுகள வச்சுக்கிட்டு பொம்பள எப்படி ராத்திரியில தண்ணி பாச்சுவாண்டுகூட யாரும் நெனக்காம பெருமாயிக்கு ராத்திரி பூட்டு ஒதுக்கிருக்காங்க, அவளுக்குக் கெடச்ச பங்குல தண்ணியப் பாச்சி, கண்ணுங்கருத்துமா வெள்ளாம செஞ்சா.

“பெருமாயி... மசங்கிப்போச்சு பூச்சி பட்ட கடிச்சுப்புடும்டி... பச்சப்புள்ளயயும் ஊதக்காத்துல படுக்கப்போட்டிருக்கவ, காச்ச கீச்ச... வந்திராதா..? ஓம்மகன் பெரியவன தொணைக்கு வரச்சொல்லவா?” புல்லு புடிங்கிட்டுப் போன பொட்டியம்மா கேட்க, “படிக்கிற புள்ளைக ஒறக்கம் கெட்டுப்போகும் மதினி, எம்புள்ளைக படிச்சு பெரிய ஆளுகளா வரணும். அதுக்குத்தான் இந்த உசுரு இம்புட்டுப் பாடுபடுது”

பச்சக்கொழந்தய குளுரு தாக்காதபடி பழய சீலத்துணிகள வச்சுப் பொத்தி, பக்குவமா தூங்க வச்சுட்டு, கம்பிளியப்பொத்திக் களத்திலயே காவலுக்கு ஒக்காந்துட்டா.

“ஏப்பா... பெருமாயி இன்னுங் கொமரிப்புள்ள கெணக்கா இருக்காளே... ஆம்பள தொண இல்லாமலா இருப்பா..?”  அங்கங்க சாட சன்னி பேசுறதயெல்லாம் சட்ட செய்யாம, கடவுளுக்கு ஒப்ப, வாழ்ந்து, புள்ளைகளைப் படிக்கவச்சு ஆளாக்கணும்னு வைராக்கியமா இருந்தா.

ராத்திரி நல்ல நெலா வெளிச்சம், உக்காந்துகிட்டே ஒறங்குன பெருமாயி ஆளு அரவச் சத்தம் கேட்டு எந்திரிச்சுப் பாத்தா, ரெண்டு மூணு பேரு, காட்டுக்குள்ள இறங்கிட்டாங்க, அவிங்க வார தினுசப் பாத்தே ‘மூணு பேரும் வசங்கெட்ட களவாணிப் பயளுக’ன்றது தெரிஞ்சுபோச்சு.

என்னா செய்யிறதுன்னு ஓசிச்ச பெருமாயி, தலையில இருந்த உருமால கழத்தி இறுக்கிக் கட்டுனா. அவ புருஷன் வேட்டி சட்டையப்  போட்டு உருமாக்கட்டி விட்டுருந்த பருத்திக் காட்டுப் பொம்ப அச்சு அசலா ஆளுகமாரியே இருக்க... கண்ணு சிமிட்டுறதுக்குல்லாம், பொம்ம இருக்கிற எடத்துக்கு ஓடுனா... கொரல மாத்தி சத்தம்போட்டா.

“யாரா அவிங்க...மரியாதயா ஓடிப்போயிருங்க..., இல்ல நடக்கறதே வேற”ன்னு சத்தம் போட்டா. இடுப்பில சொருகிவச்சுருந்த கவட்டைய எடுத்து, நாலஞ்சு கல்ல வச்சு சர்...சர்...ன்னு இழுத்து விட்டா. நாலா பக்கமும் கவட்டய வச்சு இழுத்து வீசுன கல்லு, காட்டுக்குள்ள வந்தவங்கள பதம்பாத்துருச்சு. அதுக்குமேல ஒத்த அடி எடுத்து வைக்க விடல. என்னெவோ பண்ணி வெரட்டி விட்டுட்டா.

விடிஞ்சும் விடியாம, கழுவன, கட்டவண்டிய பூட்டிகாரச் சொல்லி, கடலய மூடப் போட்டு, குப்பஞ்செட்டியாரு மில்லுக்கு ஏத்திவிட்டு நல்ல வெலைக்குவித்தா.

ஆம்பள கெணக்கா அரும்பாடுபட்டதுக்கான பலன் கையில கெடச்ச சந்தோசம் ஒரு பக்கம், புருஷன் செத்துப்போன வேதனொரு பக்கம். புள்ளைகள முன்னேத்தணுமேன்ற நெனப்பு நல்லா படிக்கட்டும்னு நாடார் பள்ளிக்கொடத்துல சேத்துவிட்டா.

நெனச்சா மாரியே நாலு புள்ளைகளும் படிச்சு முன்னேறிட்டாங்க... கல்யாணங் காச்சி முடிஞ்சு ஆளுக்கொரு தேசமா பொழைக்கிதுக. ஏதோ நல்லது கெட்டதுன்னா வந்து போவாங்க, இல்ல வருசா வருசம் மாசிப்பச்சைக்கு வந்து சாமிய கும்பிட்டுட்டு, ஆத்தாவயும் பாத்துட்டுப் போவாங்க.

“வெயில்ல கெடந்து கஷ்டப்படுற? ஓம்புள்ளைக தான் நல்லா இருக்குகள, அவுகளோட போயி ராணி கெணக்கா இருக்க வேண்டியது தான”  பொட்டியம்மா சொல்றப்பவே பெருமாயிக்கும் ஆச இருந்தாலும், “புள்ளைக நல்லா இருந்தா போதும் மதினி, நம்மளும் அங்க போயி செரமத்தக் குடுக்கக் கூடாது” ன்னு சொல்லிருவா.

 ஒரு வருசம் கோடப் பருத்தி , சடச்சடயா காய் புடுச்சு நிக்கிது.

ராத்திரியில பருத்திய மடியக்கூட்டி களவாண்டுக்கு போயிருவாங்கன்றதனால பருத்திக்காட்டுல காவலுக்கு படுத்துக்கெடக்கா பெருமாயி. ஊரு காட்டுக்குள்ள சிறுத்தப்புலி திரியுதுன்னு ஒரே பேச்சு.

நடுச்சாமம்... நாயி கொலைக்கிற சத்தம், பெருமாயிக்கு முழிப்புத்தட்ட, எந்திரிச்சு சுத்தி முத்தியும்  பாத்தா, மொண்டிக்கரட்டுக்கு கீழ கருத்தக்கண்ணன் தோட்டத்து வேட்ட நாயி ‘வல்லு வல்லு'ன்னு கொலைக்கிது.

பாறத்தோட்டம், ஒத்தத் தோட்டம், ஊருக்குள்ளன்னு மாறி மாறி நாயி கொலைக்கிது. ஏதோ வெளியூரு களவாணிப் பயகதான் எறங்கிட்டாங்களோன்னு நெனச்சா.

தெக்க பருத்திக் காட்டுக்குள்ள  சல..சலன்னு சத்தம் “யாத்தே நெனச்சா மாறி, நம்ம காட்டுக்குள்ளதான் எறங்கிட்டாங்க...? ” தினுக்குண்டு போனா.

கொரல மாத்தி  “யார்ரா அது...  மருவாதியா ஓடிப்போ. வேலுக்கம்பெடுத்தேங்... வெலாசிப்புடுவேங்... வெலாசி, ஏய்...யார்ரா” சத்தம் போட்டா.

‘சல சல'ன்னு வந்த சத்தம்... இப்பல்ல.

சீமத்தண்ணி வெளக்க தலைக்கு நேரா தூக்கி, சுத்துமுத்தி பாத்தா, வெளக்கு வெளிச்சத்தில்ல பளிப்பளிண்டு மின்னுது...

‘காட்டுப்பூனையா இருக்குமோ' உத்துப்பாத்தா... கண்ணச் சிமிட்டுறதுக்குல்லாம் மொரட்டுத்தனமா பாய்ஞ்சுருச்சு அந்த உருவம்.
நெனச்சுக்கூட பாக்கல... சிறுத்தப்புலிதான் அது.

நெலகொலஞ்சு கீழ விழுந்துட்டா, கையில வச்சிருந்த வெளக்கு ஒரு பக்கமும், வேல் கம்பு இன்னொரு பக்கமும் விழுந்துருச்சு.

எப்படியோ தெசமாரி இங்குட்டு வந்துருச்சுபோல, எங்கெங்கயோ வெரட்டுப்பெத்து கொலப்பசியில இருக்கும் போல, பாக்கும்போதே தெரியுது. கீழ கெடந்த சீமத்தண்ணி வெளக்க ஓங்கி மிதிச்சு ஒடச்சா, சிந்துன சீமத்தண்ணியில புடிச்ச தீ, 'மள... மள'ன்னு பருத்தி மாறுல எரிய ஆரம்பிச்சுருச்சு. சிறுத்தப்புலி மெரண்டு தீயப் பாக்க...

கையில கெடச்ச வேல் கம்பெடுத்து ஓங்கி...ஒரே குத்து, அம்புட்டுத்தாங், அல்லயல வச்ச குறி தப்பல... வீல்ன்னு கத்தி துடிதுடிச்சு மூச்ச விட்டுருச்சு.

சத்தங் கேட்டு, அக்கம் பக்கத்து தோட்டத்தில இருந்தவங்க கூடிட்டாங்க.

செத்த நேரத்தில என்னா நடந்துச்சுன்னெ பெருமாயிக்கு பொலப்படல, மூஞ்சிபூராம் ரத்தமா ஒழுகுது,  மாட்டுவண்டிய பூட்டி காட்டாசுப்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போறாங்க.

பத்தூரயும் பயமுறுத்திட்டிருந்த சிறுத்தப் புலிய பெருமாயி கொண்டுபுட்டாளாம்...!

சுத்துப்பட்டி பூராம் இதே பேச்சு.

மொகத்தில அம்புட்டு பெரிய காயம், செகுலெல்லாம் பிஞ்சு தொங்குது, எப்படி உயிர் தப்பிச்சான்றதே சாமி செஞ்ச புண்ணியம்.
பெருமாயி புள்ளைக எல்லாரும், தூரந்தொலவில இருந்ததனால, சேதிகெடச்சு அடுத்தடுத்த நாளு ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க.
ரொம்ப நாளா படுத்த படுக்கையாவே கெடந்தா பெருமாயி. கொஞ்சம் கொணமானதும் வீட்டுக்குக் கொண்டுவந்துட்டாங்க.

தொணக்கி எப்பவும் ஆள் இருக்கணும். யாராவது தூக்கி உக்கார வச்சா உக்காந்துக்குவா. பேச்சு மட்டும் முன்ன மாதிரியேதான் இருந்துச்சு. அப்ப எடுத்த போட்டோதான் அது. வீட்டுலேயே வந்து எடுத்துக்குடுத்தாரு அந்த போட்டோக்காரரு.
இப்டியே போவுமா என்ன? சொந்த

பந்தம் எத்தனை நாளைக்கிப் பாத்துக்கும்? புள்ளைக இருந்துதானே பாத்துக்கணும்! பூராம் வெளியூர்ல வேலை பாக்குற புள்ளைக. நிலைம இப்படி ஆனதும் புள்ளைகளால ஒண்ணும் பண்ண முடியல.

நாலு புள்ளைகளும் ஒண்ணுக்கொண்ணு தயங்க, புள்ளைக மொகத்தயே பாத்துக்கிட்டு இருந்தா பெருமாயி.  ‘யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது சாமி’ன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டா.

கண்ணுலருந்து கண்ணீரு சாரை சாரையா வருது, “புள்ள பேரம்பேத்திக நல்லாருக்கணும் சாமி. நீங்கதான் கூட இருந்து காப்பாத்தணும்” குலசாமிய கையெடுத்து கும்பிட்ட, பெருமாயி கை ரெண்டும் சொரத்தில்லாம கீழ விழுந்துருச்சு, தன்னோட கடைசி மூச்சயும் பெருமாயி இப்ப முழுசா அடக்கிக்கிட்டா.

“புருஷன எழந்து, தனி ஒரு மனுஷியா எங்கள வளத்து ஆளாக்கின ஆத்தாள, கடசிக்காலத்திலகூட இருந்து காப்பாத்த முடியலயே” முத்துராசு கதறிக் கதறி அழுக, “உங்கள, கடசி வரைக்கும் கூட இருந்து நாங்க பாத்துக்குவோம் தாத்தா” போட்டோவ தடவிப் பாத்துட்டுருந்த... சின்னஞ் சிறுசுக சொல்லிட்டு அவரையே பாக்குதுங்க. அந்த வார்த்த, முத்துராசுக்கு சம்பட்டியால அடிச்சதுமாரி வலிக்க, பேத்திகள அள்ளி நெஞ்சோட அணச்சுக்கிட்டாரு, ஆத்தா பெருமாயி போட்டோவயும் சேத்து.

x