சிறுகதை: பொன்னம்மா


இல.ஜெகதீஷ்
nidhijagadesh@gmail.com

ஊரை ஒட்டி கொஞ்சம் ஒதுங்குனவாக்குல செட்டியார் ரைஸ்மில். குறுக்கும் நெடுக்குமாக பலமான உத்திரம் வைத்து சீமை ஓடு போர்த்தியிருக்கும். நெல்லு அரைக்க, கேழ்வரகு அரைக்க, எண்ணெய்க்கு ஒரு செக்கென காரை பெயர்ந்த தரையில் பொருத்தப்பட்ட பழைய ரைஸ்மில். ஒட்டுப்போட்ட பெல்ட்டு பட்டை மோட்டார் புள்ளியில் படக் படக்கென சத்தம் வர, "வாரி கொட்டு... வாரி கொட்டு"னு ஆரம்பிப்பார். இளஞ்சூட்டில் தவிடும் அரிசியும் திசைக்கு ஒன்றாக வந்து குமியும். தவிடு குமியும் பக்கத்தில் உர சாக்குப்பையை உதறிப்போட்டு பொன்னம்மா பாட்டி தலைக்கு முக்காடு போட்டபடி, தவிட்டை ஒரு பக்கமாக இழுத்துவிட்டுக்கொண்டு, முறம் கொண்டு புடைக்க ஆரம்பிப்பார். பொன்னம்மா முகத்தில் மொத்த சிரிப்பையும் கலந்து விரல் அளவு எடுத்து உதட்டில் ஒட்டி வைத்தது போல் துளி சிரிப்பு பொதிந்திருக்கும். தவிட்டைப் புடைக்க புடைக்க நொய் அரிசி, முறத்தின் மூலையில் ஒதுங்கும். நாளொன்றுக்கும் தவிடு புடைத்தால் இரண்டு படி தேறும். அதற்கு தினமும் நெல்லு அரவைக்கு வர வேண்டும். இல்லையென்றால் அதுவுமில்லை. செட்டியாரும் பொன்னாம்மாவிற்காகக் கொஞ்சம் தவிட்டில் அரிசியை சேரவிட்டு கடைசியாக மோட்டாரின் ஸ்டாட்டரை ஆஃப் செய்வார்.

பொன்னம்மா பாட்டியை சாலையோரமிருந்த புங்கமரத்தடி வாராதி மேல் தலைக்கு துணி மூட்டையைத் தலகாணியாக சுருட்டி வைத்தபடி படுத்துக்கொண்டிருந்தபோதுதான் முதன் முதலாகப் பார்த்தது. அம்மாவும் நானும் செம்மறிகளை மேய்ச்சலில் இருந்து வீட்டுக்கு ஓட்டியபோது, படுத்துக்கொண்டிருந்த பாட்டியை என்ன ஏதென்று விசாரித்தார். "கொசுவம் வச்சி கட்டுன புடவையை பார்த்தா எங்கியே தெக்கித்தி பக்கமாட்டமிருக்குது"னு அம்மா, அப்பாவிடம் சொல்ல, ஐப்பசி மாத மழையில் அப்பாவோட கால் விரல்களில் கூடு கட்டியிருந்த சேற்றுப்புண்ணிற்கு, தேங்காயெண்ணெய் மஞ்சபொடி கலந்து தேய்த்தபடியே "அப்படியே அங்கியே உட்டு வண்ட்டியா நீ...ஆகாரம் ஏதுனா வேணுமானு ஒரு வாய் கேக்குறதுதான்டி"னு கையைக் கழுவவும், வடக்கில் மின்னல் பளிச்சென்று வெட்டி மறைந்தது தெரிந்தது. மழை தூத்தல் போடவும் அம்மாக்குக் கால் தாளல. "கொடை புடிச்சினு ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துருட்டா... கிழவி மழைக்கு எங்க போய் ஒண்டுவாளோ." "போய் பார்ரீ... மானமிந்த இடி இடிக்குது. பச்சமரத்தடியில வுட்டு வண்டவ்வ."

அப்படி வந்து சேர்ந்த பொன்னம்மா பாட்டி அசலூர்க்காரின்ற அடையாளமே இல்லாமல் ஊரோட ஒண்ணாயிட்டா. முப்பது குடும்பத்திலும் ஒருத்தியானாலும் நீச்ச தண்ணிக்கு எத்தினி நாளைக்கு ஒருத்தர் கையை எதுர்பார்த்துனு இருக்க முடியும்? பொன்னம்மா பாட்டி அரை வேலை, கால் வேலை செஞ்சி கொடுத்து, கொடுப்பதை வாங்கி உலை பொங்குற அளவுக்குத் தயார் ஆகவும், புள்ளையார் கோயில் பக்கமா, அப்பாவும் மத்த ஆம்பிளைங்களும் ஒரு கொட்டாய் கட்டிக் கொடுத்துட்டாங்க. கல்லடுப்பும் ரெண்டு தேக்ஸாவும், ஒரு கருத்த சட்டியுமா பொன்னம்மா ஆக்கித்தின்னு பொழங்கிட்டு இருந்தா. இருந்தாலும் தடப்புல தாம்புல யார் வூட்ல இருந்தாவது கொழம்போ, புளி கொஜ்ஜோ ஊத்தி குடுத்துருவாங்க. ராவுல கதை பேசினே யார் வூட்டுத் திண்ணையிலாவது படுத்துத் தூங்கிருவா. ஊர்ல யாரு புள்ளத்தாச்சின்னாலும் பொன்னம்மா சொல்படிதான் ஆகாரம்னு ஆகிப்போச்சு. புருஷன் பொண்டாட்டி சண்டை சச்சரவுக்கும் பொன்னம்மா சொல்லே சமாதானம். சுருக்குப் பையை விரிச்சி மூக்குபொடி டப்பாவில் ஈரமத்த சுண்ணாம்பை சுரண்டி வாயில் போட்டபடி நல்ல வார்த்தை சொல்லி சமாதானம் செய்வாள்.

காத்தால எளவெகுலுக்கு நெல்லு கோணி பையைப் போட்டு கால்நீட்டி கெழக்கு பார்த்தபடி பொன்னம்மா உட்கார்ந்தா போதும், கை கொழந்தைகளை கொண்டாந்து அவ கால்மேலே படுக்கப்போட்டு "செத்த பார்த்துக்க பாட்டி, அடுப்புல பருப்பு வேகுது கடைஞ்சிட்டு வரேன்னு" போட்டுப் போகும் ஊர்ப் பெண்களும் உண்டு. கொழந்தைங்க பிஞ்சுக் கண்ணு வெகுலுக்கு கூசியெடுக்க, பிளக்காம் பிளக்காம்னு முழிக்க, புள்ளையை நல்லா வெகுலுக்கு காட்டிக்கொடுப்பா, பேச்சுத்துணைக்கு வழியே போற பொம்பளைங்களும் "யாரூட்டூ புள்ள பாட்டி?" "எல்லாம் நம்மூட்டு புள்ளையதான்"னு வாயை அடக்கிப்புடும். பொல்லாத்து வுழுந்து இருந்தாலும் சரி, வகுத்து நோகு பட்டாலும் சரி பொன்னம்மாவே திக்குனு ஆகிப்போச்சு. காத்துக்கு முறிஞ்சி வுழுந்த முருங்க கிளையில் இருந்த முருங்கை துளுரு துலுப்புகளை ஒடைச்சி திண்ணையில் அம்மாவும் பொன்னம்மா பாட்டியும் ஆய்ந்து கொண்டிருக்கும்போதுதான் பொன்னம்மா பாட்டி கதையை அம்மா கேட்டுவச்சா. அம்மாமாருங்களுக்கு உலகம் பூரா ஒரே கதைதான். ஒண்ணுரெண்டு தப்பி போகும்.

புருஷனையும் ஒத்த புள்ளையையும் குடிக்கு வாரிகொடுத்ததும், மருமவ இன்னொரு துணையை தேடிக்கவும், கால் போன போக்குல நடந்தவதானாம் பொன்னம்மா. என்னா ஒண்ணு... பாழும் மனசுக்கு மகன் வயித்துப் பேத்தியை நெனைக்கும்போதுதான் தாளமாட்டாம தேம்புவாளாம். ஊராம்புள்ளையை தம்புள்ளைகளா வாரி கட்டிக்கினாலும், ரத்தபந்தம்னு ஒரு நேரமில்லைனாலும் ஒரு நேரம் உசுரைப் புழியும். பெத்தவளுக்கே கஞ்சி ஊத்த கட்டப்பஞ்சாயத்து பண்ற ஒலகத்துல, நம்மளுக்கு மட்டும் காலமெல்லாம் கஞ்சி ஊத்த ஊர்ல முடியுமா? எந்தச் சொல்லுக்கும் எடம் கொடுக்க வேணாம்னுதான் செட்டியார் ரைஸ் மில்லுக்கு தவிடு பொடைக்கப் போக ஆரம்பிச்சாளாம் பொன்னம்மா பாட்டி.

"ஏ... பாட்டி நாங்க குடிக்குற கஞ்சியில ஒரு கொட்டாங்கச்சியளவு கூடவா கஞ்சி ஊத்தாம போயிருவோம்? இந்த வயசுக்கு மில்லுக்குப் போய் தவுடு பொடைக்கணுமா?" னு அம்மாவும் கேட்டுப்புட்டா. "அப்படி இல்லை தாயீ.. கை காலு கடவுளு கெட்டியா வச்சிருக்கும்போது, ஒக்காந்து கஞ்சி குடிக்க ஒப்புமா தாயீ, ஆனவெதிக்கும் ஒழைப்பு இருக்கணும். ஒரு வேளை ஓஞ்சி ஒக்காந்துட்டா அப்ப கஞ்சி ஊத்துடி மகராசி"னு அம்மா தாடையைப் புடுச்சி கொஞ்சுவா பொன்னம்மா. கண்டங்கத்திரியும், கருவாடும் மொச்சைக் கொட்டையும் கலந்து கொழம்பு வச்சி மணக்க மணக்க, நொய்யரிசி சுடு சோத்துல பிணைஞ்சி உருண்ட புடுச்சி, வாசல்ல ஒக்காந்து ஆளுக்கொரு வாய்னு புள்ளையகளுக்கு குடுத்து குடுத்து மனசு குளுந்து போனாலும், தன் பேத்தி மனசோட மூலையில கையேந்தி நிக்குற கோலம் கண்ணுல தண்ணி தளும்ப தளும்ப வந்து நிக்கும். அத்தனை பாசமும், முந்தானையின் ஈரத்துல பழியா கிடக்கும்.
பொன்னம்மா பாட்டி இன்னாருக்குதான் சொந்தம்னு இல்லை. ஊருக்கே சொந்தமானவளாயிட்டா. நெல்லு அறுவடை காலம்னா போதும்... வைக்கோல் உதறுவதும், நெல்லு காத்துக்கு தூத்தறுதுன்னு யார் வீட்டு அறுவடையா இருந்தாலும் இறங்கிடுவா. இரண்டு வல்லம் நெல்லை காய வச்சி, உரல்ல குத்தி புடைச்சி வச்சிப்பா. செட்டியார் மில்லுல கொடுத்தாலும் அரைச்சி கொடுத்துருவார். ஆனாலும் பொன்னம்மாக்கு மனசு ஒப்பலை. குத்தி புடைச்ச அரிசியில், வறுத்த கொள்ளு போட்டு கஞ்சி காய்ச்சி, அப்பாக்கும் எனக்கும் கூட ஊத்திக்கொடுக்கும். இப்படியாகப் போயிட்டுருந்தது பொன்னம்மா வாழ்க்கை.

பொழுது விடிஞ்சும் பொன்னம்மா பாட்டி வாசல்ல சாணிதண்ணி இல்லாம கெடக்குறதைப் பார்த்து அம்மா "பாட்டி... ஏய் பாட்டி, பொழுது சுள்ளுன்னு ஏறி வந்தும் தூக்கம் தொலையலையா’’ன்னு படலைத் திறந்து உள்ள போனவதான், பாட்டி கிடந்த கோலத்தைப் பார்த்து வெளியே ஓடி வந்தா. கிணத்தடியில சாமன் சட்டிய வெளக்கினு இருந்த பொம்பளைங்களும், கொட்டாயில் மாடு புடிச்சி வெளிய கட்டிக்கிட்டு இருந்த ஆம்பளைங்களும் ஓடி வந்தாங்க. "ராத்திரிகூட நல்லாதானடி இருந்தா, சூடா களியும் ரக்கிரி கொழம்பும் வச்சி தின்னுட்டுத்தானே படுத்தா"னு ஆளாளுக்குப் பேச, வழியே போன முன்சீப் சீனிவாச பெருமாளும் கூட்டத்தைக் கண்டு சைக்கிளை விட்டு இறங்கி உள்ளே போனார். "போயிரிச்சு" என வெளியே வந்தார். "சர்தாம்பா நீங்க சொல்றது. சொந்த ஊரு, சொந்த பந்தம், சாதி, குலம் கோத்திரம்னு எதும் தெரியாம, கிழவியை அடக்கம் பண்ணிற முடியாது. வழியா வந்தவ, வழியே போயிருந்தா ஒப்புடியா போயிருக்கும். இப்போ யாரை எங்கன்னு தேடுறது. சொல்லுங்க பார்க்கலாம்? எதுக்கும் டவுன் போலீஸுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டு ஆகுறதைப் பார்க்கலாம்" என முன்சீப் சொல்லவும், அம்மா ஒரு பாட்டம் அழுது கதறிட்டா. “மனுசன் உசுரு வாழ்றதுகூட பெருசில்லை. அது போனதுக்கப்புறம் படுற பாடு இருக்குதே... என்ன ஆனாலும் இப்படி ஊர் பேர் தெரியாத ஊருல அனாதை பொணமா போயிரக்கூடாதப்பா" செட்டியாரும் கலந்துகொள்ள, "அதை அனாதை மாதிரியா செட்டியாரே ஊருல பார்த்துக்கிட்டோம்?.. பொன்னம்மா பாட்டி இந்த ஊருக்காரிதான். அவ தூக்கி வளர்த்த புள்ளைங்கதான் எங்க புள்ளைங்க. அவங்களே பேரன் பேத்திகளா இருந்து நெய் பந்தம் புடிப்பாங்க... அவ எதுக்கு அனாதையா போகணும் செட்டியாரே? உசுரோட இருக்கும்போது வச்சு ஒரு வாய் கஞ்சி ஊத்தாத, சொந்தம் வந்துதான் ஆகணும்னு ஒண்ணுமில்லை. முன்சீப்பண்ணா, நீங்க பண்றதை பண்ணுங்க... நாங்க கீறோம். பார்த்துக்கறோம்" இது அப்பா. "அதுக்கில்லைப்பா, நாளைக்கு யாரும் வந்து பிரச்சனை பண்ணிற கூடாது. மொறைன்னு ஒன்னு இருக்குது. நான் ஸ்டேஷனுக்கு ஒரு வார்த்தை சொல்லிடறேன். பிறகால எதும் செய்யலாம்."

பொன்னம்மா பாட்டியின் சாவுக்கு பறையும், வெடியும் ஊரே ஏற்பாடு செய்துகொண்டிருந்தது. "ஊர் சுடுகாட்டுல போட எல்லாருக்கும் சம்மதம்தானே.." என்றார் முன்சீப். "ஊரோட வாழ்ந்தவ... அப்படித்தான் இருந்துட்டுப் போகட்டுமே. எங்க போட்டாலும் மண்ணு தின்னு செரிக்கப்போவுது... அப்படியே போட்ருலாம்" என்றார் அப்பா. "நல்லா கீதுறா உன் நியாயம்... எங்கியோ போன கிழவியை நீயும் உன் பொண்டாட்டியும் , கூட்டுவந்து ஊர்ல கொட்டாய போட்டு வச்சி, உங்க எடப்புல தொடப்புல வேலை வாங்கினு திரும்பினவங்கதானே... ஏன் உன் தோட்டத்துல போட்டு, அமாவாசை அமாவாசைக்கு வெளக்கு போடு... வேணான்னு சொல்லலை... ஊர் பொது சுடுகாட்டுல போட விட மாட்டேன்". மிலிட்டரியில இருந்து பாதியிலே வேலையை உதறிட்டுத் ஊர் திரும்புன மிலிட்டரிகாரன் சுப்புடு சொன்னதும், அப்பாவுக்கு ரத்தம் ஜிவ்வுன்னு ஏறிப்போச்சு. "ஏன்டா நன்றியத்தவனே, நீ ஒம் பொண்டாட்டி வயித்துல ஒரு புள்ளயை கொடுத்துட்டு பட்டாளத்துக்குப் போனதும், கூட இருந்து நல்லது கெட்டது பார்த்து, உன் பொண்டாட்டிக்கு பெத்த தாயா இருந்து, உம் புள்ளைக்கு பீத்துணி அலசி காயப்போட்டாளே, அப்போ சொல்லியிருக்கணும் நீ... ஊர் சுடுகாடு உங்கப்பன் வூட்டு சொத்து இல்லை, நீ மாட்டேன்னு சொல்ல... கிழவியை அங்கதாண்டா புதைப்போம். உன்னால் ஆனது பார்" என அப்பா மூச்சு இறைக்க குரலெழுப்பினார். "அட யென்னப்பா... ஆளாளுக்கு வம்பு பேசினு. இது உங்க சாதி சனத்துக்கான சுடுகாடு. இன்னைக்கு சரின்னு கிழவியைப் பெரிய மனசு பண்ணி அடக்கம் பண்ணி போடலாம். நாளைக்கு இதை கைகாட்டி, வேத்து சாதிக்காரன் வந்து நின்னா என்னப்பா பண்ணுவீங்க? அதையே நீங்களும் முடிவு பண்ணிக்கோங்க, என்ன நான் சொல்றது?" முன்சீப் கொம்பு சீவ ஆரம்பித்தார். ஊர்ப் பெண்கள் மௌனம் காத்தது, அம்மாவிற்கு என்னவோ போலிருந்தது. "முன்சீப் சொல்றதும் வாஸ்தவமப்பா, இன்னைக்கு சரின்னு பட்டது, நாளைக்கு தப்புன்னு படும்... என்னத்துக்கு ஊர்ல சண்டை சச்சரவு. பொன்னாம்மாளை ஆத்தங்கரையில புதைச்சுருவோம்" என செட்டியார் முடித்து வைத்துவிட்டார். அம்மாவும் அப்பாவும் அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார்கள்.

பொன்னம்மா பாட்டியை ஆற்றங்கரையில் புதைத்துவிட்டு திரும்பிய அன்றிரவு மழை வெளுத்துக் கட்டியது. ஒரு வாரம் கழித்து ஆற்றைக் கடக்கும்போது பொன்னம்மா பாட்டியை அடக்கம் செய்த திசை, யதேச்சையாக நோக்கினேன். செண்டு மல்லி நாற்றுகள் முளைத்திருந்தன. மண் மேடிட்ட பகுதியைக் கரைத்தபடி சிவந்த நீர் தெற்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

x