கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர் மட்டம் 9.18 அடியாக சரிவு


கோவை: போதிய மழைப்பொழிவு இல்லாததால் கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 9.18 அடியாக குறைந்துள்ளது.

கோவையின் முக்கிய நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் கோவை மாவட்டத்தின் சாடிவயலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு, வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும், கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் கடந்த பருவமழைக் காலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

மேலும், கோடைகாலத்தில் கோடை மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. சிறுவாணி அணையில் கடந்த மாதம் 25-ம் தேதி நிலவரப்படி 10.36 அடிக்கு நீர்மட்டம் இருந்தது.

அதுவே, 27-ம் தேதி 10 அடியாக சரிந்தது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவும் சூழலுக்கு ஏற்ப குறைத்து எடுக்கப்படுகிறது. அதேபோல், கடந்த மாதம் 30-ம் தேதி 9.48 அடியாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் இருந்தது.

அதுவே, 0.30 அடி சரிந்து இன்றைய (ஜூன் 1-ம் தேதி) நிலவரப்படி 9.18 அடியாக உள்ளது. இன்றைய நிலவரப்படி சிறுவாணி அணையிலிருந்து 41.30 எம்எல்டி தண்ணீரானது குடிநீர் தேவைக்காக எடுத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

பொதுவாக தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதியில் மழை அதிகளவில் பெய்யும். எனவே, நடப்பு தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதியில் மழை அதிகளவில் இருக்கும் என மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அணையில் தற்போது உள்ள நீர்மட்டம், எடுக்கப்படும் நீரின் அளவு இதே நிலையில் தொடர்ந்தால், ஜூலை முதல் வாரம் வரை தட்டுப்பாடு இன்றி தண்ணீர் விநியோகிக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

x