கோவை: கோவை மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் கடந்த இரண்டு வாரங்களாக பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்பட வில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பொருட்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 55 ரேஷன் கடைகளும், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் 1,361 கடைகள், சுய உதவிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் 101 கடைகள், கருப்பட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கட்டுப்பாட்டில் 19 கடைகள் என மொத்தம் 1,536 நியாய விலைக் கடைகள் உள்ளன. 11,42,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வழக்கமாக நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பப்படும் பருப்பு, பாமாயில் கடந்த இரண்டு வாரங்களாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் ரேஷன் கடைகளில் இப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நியாயவிலைக் கடைகளில் விநியோகிப்பதற்கான பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் விடும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொது விநியோகத் திட்டம் தொடர்பாக துறை அலுவலர்களுடனான கூட்டத்தில் பங்கேற்ற உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனாவிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் நிலைமை சீரடையும்” என்றார்.