மகள்- செம்போடை தங்க.நாகேந்திரன்


பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த தமயந்திக்கு தூரத்தில் டீக்கடை வாசலில் படுத்திருந்த கிழவியின் மீது பார்வை போயிற்று. அந்தக் கிழவியின் முகம் எங்கோ பார்த்தது போலிருந்தது. இறங்கிப்போய் பார்த்தாள். அது அவளது தோழி ரேவதியின் மாமியார் பாக்கியம். இவர் என்ன இங்கு கிடக்கிறார்? மகள் வீட்டிலேயே தங்கிவிட்டதாகவும் எப்போதாவது வருவதாகவும் ரேவதி சொல்லியிருந்தாளே..? தற்போது சம்பந்தமில்லாமல் துணைக்குக்கூட ஆளில்லாமல் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடக்கிறாளே..?

தமயந்தி பக்கத்தில் நின்றிருந்த இளைஞனை அழைத்தாள். “தம்பி இங்க வாங்களேன்... இவங்க எனக்கு சொந்தக்காரங்க... மயக்கமாயிட்டாங்க... ஒரு கை போட்டுத் தூக்குங்களேன்...” இருவரும் சேர்ந்து அருகிலிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர வைத்தார்கள். கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து கிழவியின் முகத்தில் தெளித்தாள் தமயந்தி. கொஞ்சம் மயக்கம் தெளிந்த உடன் காபி வாங்கிக்கொடுத்தாள். “என்னைத் தெரியுதாம்மா?” என்றாள் காதருகில்.

‘‘தெரியுதும்மா” என்ற பாக்கியம் அதற்கு மேல் பேச இயலாமல் கண்ணீர் சிந்தினாள். தமயந்தி அவளிடமிருந்து விலகி செல்லை எடுத்து ரேவதிக்கு போன் செய்தாள். போனை ரேவதி எடுத்ததும், தமயந்தி கேட்டாள் “ஏய் உன் மாமியார் எங்கடி?” “ஏன் கேக்குறே.. அவங்க சீர்காழிக்குப் பொண்ணு வீட்டுக்குப் போயிருக்காங்க...”

“அது இருக்கட்டும்... அவங்க எப்ப போனாங்க?” “இன்னிக்கு காலையிலதான்!” “என்னது இன்னிக்கு காலையிலா? என்னடி சொல்றே?’’ ‘‘அவங்க காரைக்கால் பஸ் ஸ்டாண்டுல மயங்கிக் கிடக்கிறாங்கடி” என்றாள் தமயந்தி. “என்னடி சொல்றே...”அதிர்ச்சியுடன் கேட்டாள் ரேவதி. “சரி நீ அவங்கள பார்த்துக்க. நான் காரெடுத்துக்கிட்டு வர்றேன்” என்றாள். “சரிடி.’’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டு, பாக்கியத்தை நெருங்கி, “ஏம்மா தனியா வந்தீங்க. என்ன பிரச்னை?” என்றாள். பாக்கியத்தால் எதுவும் பேச இயலவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.

x