ஓடி வந்தவர்- நர்சிம்


அவருடைய முகத்தை எளிதாகக் கடந்து போய்விட முடியவில்லை என்பதால் அவருக்கு அருகில் நின்றிருந்த பழ வண்டியின் முன் நின்றேன். இரவு பெய்த மழையின் மிச்சமாய் ஈரச் சாலை மனதை இலகுவாக்கி இருந்தது. இதற்கு மேலும் காலம் தாழ்த்தக் கூடாது எனக் கடந்த பத்து வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்த காலை வேளை நடைப்பயிற்சியைக் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டிருக்கிறேன். 

அவர் சூழலுக்கு மிக அந்நியமாக நின்றிருந்தார். ஆனால், அவ்வளவு பரிச்சயமாக இருந்தன அவருடைய கண்கள். ஒல்லியான தேகம், ஒரு நேர்கோடு போல் இருந்தது உடலமைப்பு. யுவான் சுவாங் தாடி. நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் வயது. சட்டையை இன் செய்திருந்தார். ஆனால் பெல்ட் அணிந்திருக்கவில்லை. அவர் என்னிடம் ஏதேனும் கேட்கவேண்டும் என ஏன் எனக்குத் தோன்றுகிறது என யோசித்துக்கொண்டே பழங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பழ வியாபாரியிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே பக்கவாட்டில் அவரைப் பார்ப்பதுதான் திட்டம். செயல்படுத்திக் கொண்டிருந்தேன். எப்போதும் வளவளவென பேசும் பழம் இன்று நறுக்கிக் கொண்டிருந்தார் வார்த்தைகளை. இனிக்கும் என்ற உத்திரவாதம் கொடுக்கப்பட்ட பப்பாளியை வாங்கிக்கொண்டு இரண்டு அடிகள் எடுத்து வைத்து மீண்டும் அவரைப் பார்த்தேன். என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். புன்னகைக்கலாமா என யோசித்த நொடியில் எனக்கு அலைபேசி அழைப்பு வர எடுத்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்த இடைவெளியில் அவர் கீழே குனிந்து தன் செருப்பில் ஒட்டிக்கொண்டிருந்த ஜவ்வுக்காகிதத்தை அகற்றும் முயற்சியில் இருந்தார். மெலிதான ஏமாற்றமாய் உணர்ந்து அங்கிருந்து நகர எத்தனிக்கும்போது அவரிடம் இருந்து வந்தது குரல்.

“சார்”

இத்தனை நாட்களில் எதன் மீதும் எவர் மீதும் இரண்டாம் பார்வை பதியத் தோன்றியதில்லை. இன்று ஏனோ இவரைப் பார்த்த நொடியில் இருந்தே ஒரு குறுகுறுப்பு. அவரைப் பார்த்தால் யாசகம் கேட்பவர் போல் இல்லை. அவர் என்னிடம் பேச வேண்டும் என சந்தர்ப்பம் அமைத்துக்கொண்டு அங்கு நான் நின்றிருப்பது எனக்குள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

x