இதுவும் ஒரு தாஜ்மஹால்- மனைவிக்காக கனகவேல் கட்டிய காதல் கோட்டை!


கரு.முத்து

கால இயந்திரத்தில் பயணித்து, முகலாயர் காலத்து நகரத்தில் இறங்கிவிட்ட உணர்வைத் தருகிறது அந்த வீடு. மன்னிக்கவும் அரண்மனை. கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள், அலங்கார விளக்குகள், ஓவியங்கள், சிற்பங்கள் எனக் கலாரசம் சொட்டும் இந்தக் கட்டுமான அதிசயம், புதுச்சேரி அருகே தமிழகத்தின் கோட்டக்குப்பத்தில் இருக்கிறது. காதல் மனைவி மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலைப் போல, தனது அன்பு மனைவி பானுவுக்காக இந்த அரண்மனையை உருவாக்கியிருக்கிறார் கனகவேல்!

கட்டுமான ஒப்பந்தக்காரரான கனகவேல், தனித்துவம் மிக்க வீடுகளைக் கட்டுவதில் தேர்ந்தவர். “எல்லாருக்கும் அற்புதமா வீடு கட்டித் தர்றீங்க. நமக்குன்னு எப்ப ஒரு வீடு கட்டப்போறீங்க?” என்ற தனது மனைவி பானுவின் கேள்விக்கு விடையாக இதைக் கட்டியிருக்கிறார். “பள்ளிப் படிப்பு வரைதான் படிச்சேன். மனைவி எம்பிஏ படிச்சவங்க. அவங்க ஒரு விஷயத்தை விரும்பிக் கேட்கும்போது அதை அட்டகாசமா நிறைவேத்தி அசத்திடணும்னு நெனச்சேன்” என்று பணிவுப் புன்னகையுடன் சொல்கிறார் கனகவேல். சொந்த வீட்டுக்கான கனவை கணவன் மனைவி இருவருமே பேசி இறுதி செய்திருக்கிறார்கள்.

“முகலாய பாணி கட்டிடக் கலையை உள்வாங்க டெல்லி, ஆக்ரான்னு வட இந்திய நகரங்கள்ல ஒரு வருஷ காலம் அலைஞ்சி திரிஞ்சேன். பல நுணுக்கங்கள் புரிய வந்தது. அப்புறம், ராஜபுத்திரர்களோட கட்டிட பாணி வித்தியாசமாயிருக்கும்னு கேள்விப்பட்டு ராஜஸ்தானுக்கும் போய்ட்டு வந்தேன். ரெண்டு பாணியையும் கலந்து இந்த அரண்மனையை உருவாக்கியிருக்கேன்” என்று சொல்லும் கனகவேல். காதல் மனைவிக்காக கட்டிய இந்த மாளிகையில் அதிநவீன வசதிகளையும் சேர்த்து இழைத்திருக்கிறார்.

x