இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் பதவியேற்பு


சி.ஜி.கர்ஹட்கர்

கல்பாக்கம்: கல்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் நேற்று இயக்குநர் அலுவலகத்தில் பதவியேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அணுமின் நிலையம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், முதன்மையாக கருதப்படும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பதவி முக்கியத்துவம் பெறுகிறது. இதன் புதிய இயக்குநராக விஞ்ஞானி சி.ஜி.கர்ஹட்கர் நேற்று பதவியேற்றார்.

புதிய இயக்குநரான இவர், கடந்த 1987-ம் ஆண்டு இயந்திர பொறியாளர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். மேலும், மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி பள்ளியில் 31-ம் திரளில் பட்டம் பெற்றார். கடந்த 1988-ம் ஆண்டு மும்பையின் ட்ராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு உலை செயல்பாட்டு பிரிவில் சேர்ந்தார்.

மேலும், கடந்த 36 ஆண்டுகளில் பிஏஆர்சி-ல் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். பாபா அணு ஆராய்ச்சி உலை குழுமத்தின் இயக்குநரான இவர், ஆராய்ச்சி அணு உலைகளின் பாதுகாப்பான மற்றும் திறமையான இயக்கம், பயன்பாடு, அணு உலை நீக்கம் மற்றும் புதிய அணு உலைகளுக்கான திட்டமிடல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார்.

இவரது தலைமையின் கீழ் கதிர்வீச்சின் விளைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டின் சமநிலையை வைத்து நாட்டிலேயே முதல் முறையாக சைரஸ் (Cirus) போன்ற பெரியஅணு உலைக்கான அணு உலை நீக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. பொருட்களின் கதிர்வீச்சு பண்புகளுக்கான தரவுத் தளத்தை உருவாக்குவதற்கு சைரஸ் அணு உலையிலிருந்து தரவுச் செயலாக்கத்துக்காக ஒரு செயல்முறையை நிறுவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

x