திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டி, இருஊழியர்கள் என, 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தனியார் பெயின்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் 6 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சென்னை, அம்பத்தூரை சேர்ந்த சுகந்தி(56), ஷோபனா(31), புஷ்கர், கடம்பத்தூரை சேர்ந்த பார்த்தசாரதி(45) ஆகிய 4 ஊழியர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை4.15 மணியளவில், தொழிற்சாலையின் ஒரு பகுதியில், மின்கசிவால் தீ பற்றி எரிய தொடங்கியது. அத்தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதனால், தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வெடித்து சிதறியது. தொழிற்சாலை சுவர்கள், அருகில் உள்ள தொழிற்சாலைகளின் சுவர் பகுதிகளும் இடிந்தன. மேலும், பெயின்ட் தொழிற்சாலையின் தகரத்திலான மேற்கூரை வெடித்து சிதறி, சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சீனிவாசன்(37), முகம், தலையில் படுகாயமடைந்தார்.
அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
விபத்தின் போது, படுகாயத்துடன் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ஊழியர் ஷோபனா, காக்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே தீ விபத்து குறித்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த, திருவள்ளூர், பேரம்பாக்கம் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள், தண்ணீர் மற்றும் ரசாயன நுரைகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த அப்பணியில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு, தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட போது, தீயில் கருகி உயிரிழந்த இரு ஊழியர்களின் உடல்கள், எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டன. மற்றொரு ஊழியரை இடிபாடுகளில் தேடும் பணி நேற்று இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. அதுமட்டுமல்லாமல், எலும்பு கூடுகளாக மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து, தகவலறிந்த ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் எஸ்.பி. சீனிவாச பெருமாள் உள்ளிட்ட காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.