ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com
சீசன் ஆரம்பிச்சாலே நம்ம கதை கந்தல்தான். நீங்க பாட்டுக்கு வேற எதையாச்சும் யோசிக்காதீங்க பாஸ்... நான் மாவடு சீசனைச் சொன்னேன். சோத்துக்குப் பக்கத்துல ஒரு மாவடுவை வெச்சா, ஸ்ஸ்... ஹப்பா... சும்மா சொய்ங்னு இறங்கும் பாருங்க சோறு. ஒரு வடுவைச் செல்லமா கடிச்சு, சாறை உறிஞ்சி, அதுக்குப் பின்னாடி சோத்துருண்டைய ஒவ்வொரு கவளமா உள்ள தள்றதுல இருக்குற சொகமே தனி. இந்த ஞாபகத்துல ஒருநாளு, “மோர் சோத்துக்கு தொட்டுக்க எதும் இல்லியா”னு கேட்டேன். வூட்டுக்காரம்மா காலி சட்டிய காட்டுனாங்க. “முழு ஜாடியும் நீங்கதான் தின்னு தீர்த்தீங்க... போக வர தின்னுகிட்டே இருந்தா வெளையுமாக்கும்?”னு செல்லமா டோஸ் விட்டாங்க. அதுக்கு மேல சும்மா இருக்க முடியுமா... பைய தூக்கிட்டு மாவடு வாங்க கெளம்பிட்டேன்.
திருச்சியில மாவடு வாங்குறதுக்குன்னே ரெண்டு மூணு எடம் மார்க் பண்ணி வச்சிருக்கேன். டவுனுக்குப் போனா ஆண்டார் தெரு மொகனைல கடை பரப்பி வச்சிருப்பாங்க. அப்பெல்லாம் ஒரு வெயிட்டான அம்மா அங்க ஒக்காந்துருக்கும். ஏதோ ஆண்டார் தெரு பறந்து போயிடாம இருக்க பேப்பர் வெயிட் வச்சாப்ல இருப்பாங்க; அவ்ளோ குண்டு!
கூட்டத்த பாத்துட்டா, “அருமையான மாவடு... போனா வராது; பொழுது விடிஞ்சா கெடைக்காது”னு வசனம் விடுவாங்க. மாவடு குப்பலைப் பார்த்தா மனசு தானா பாட ஆரம்பிச்சுரும். பொடி வடு கதைக்கு ஆவாது. அதே பெருசா இருந்தா டேஸ்ட் அவுட். இப்ப கொஞ்ச நாளா அந்தம்மாவ காணோம். வேற யாரோ ஒருத்தரு அந்த இடத்துல இருக்காரு. “நீ வாடிக்கையா வர... ஒனக்கு மட்டும் தான் இந்த ரேட். வேற யார்ட்டயும் சொல்லிராத”னு எனக்கிட்ட சொல்லுவாரு. சைஸா விசாரிச்சுப் பார்த்தப்பத்தான் தெரிஞ்சுது. இந்த ரகசியத்த அவரு எல்லாருகிட்டயுமே சொல்லிருக்காரு!
கொஞ்சம் அசந்தோம்னா, அள்ளிப் போடுறப்ப சின்னது பெருசு வெம்புனது எல்லாத்தையும் கலந்துகட்டி நம்ம தலையில கட்டிருவாரு. “நானே பொறுக்கிப் போடுறேனே”ன்னு சொன்னா, கெட்ட கோபம் வரும் அந்த மனுசனுக்கு. ”கையெல்லாம் வைக்கிற வேலை இல்ல... இஷ்டமிருந்தா வாங்கு... இல்லாட்டி எடத்த காலிபண்ணு சாமி”ம்பாரு.
அப்படியே அவரு சொன்னபடி வாங்கிட்டுப் போனாலும் அளவையில வேலைய காட்டிருவாரு. படிதான் பெருசா தெரியும். அளந்து போட்டா கால் பைக்குக் கூட காணாது. இந்தக் கஷ்டத்தை எல்லாம் என்னோட நண்பர் ஒருத்தர்கிட்ட சொல்லிப் புலம்புனேன். “இதுக்கா இம்புட்டு லோல் படுறே!”ன்னு சொன்ன அவரு, ஒரு தோப்புக்கு என்னைய கூட்டிட்டுப் போனாரு. “இந்த இடத்த வேற யாருக்கும் சொல்லாதப்பா; ரகசியமா வெச்சுக்க. ரொம்ப நம்பிக்கையான ஆளுங்களுக்கு மட்டும்தான் இங்க மாவடு தருவாங்க. தோப்புல விழுவற மாவடுவை சல்லிசா வாங்கலாம். டேஸ்ட்ல அடிச்சுக்க முடியாது”ன்னு பரம ரகசியம் மாதிரி சொன்னாரு. அவரு இப்படிச் சொன்னப்ப அந்த யாவாரி ஞாபகம் எனக்குள்ள லைட்டா வந்து போச்சுது.
அந்தத் தோப்புக்குள்ள ஒரு மண்டபம். அதுல குப்பல் குப்பலா மாவடு. பார்க்கிறப்பயே கண்ணப் பறிச்சுது. இதாண்டா சொர்க்கம். இத்தனை நாளா இது தெரியாம இருந்துட்டேனேன்னு சொல்லி நண்பரைத் தாவாங்கட்டை பிடிச்சு கொஞ்சுனேன். “ஊறப் போட்டதும் முதல் மாவடு உனக்குத்தான்”னு சத்தமாவே சொன்னேன். தோப்புக்காரருக்கு நண்பர் நல்ல பழக்கம் போல. கூடவே ஒரு கை ஓசியும் அள்ளிப் போட்டாரு. அதையெல்லாம் பார்த்து எனக்குக் கண்ணுல தண்ணியே வந்துருச்சு! இப்பேர்ப்பட்ட ஆளை கைல வச்சுகிட்டு இத்தனை நாளா யூஸ் பண்ணிக்காம விட்டுட்டோமேன்னு நெனச்சுக்கிட்டே வீட்டுக்குப் போனேன்.
நான் வசூல் மாவடு ராஜா மாதிரி கொண்டாந்து கொட்டுனத பார்த்துட்டு வீட்டுக்காரம்மா அசந்துட்டாங்க. “ஒங்களுக்கு இவ்ளோ சாமர்த்தியம் கிடையாதே... உண்மைய சொல்லுங்க” என்று அவங்க செல்லமா மிரட்டினதும், “சங்கர்ங்கிற என்னோட ஃப்ரெண்ட் வாங்கிக் குடுத்தாரு”ன்னு பட்டுன்னு உண்மைய சொல்லிட்டேன். “அதான பார்த்தேன்... உங்களுக்கு ஏது இம்புட்டு சமர்த்து?”ன்னாங்க. அவங்கதான எனக்கு மாவடு ஊறப்போட்டுத் தரணும்ன்றதால அந்த நேரத்துல அவங்களப் பகைச்சிக்க விரும்பாம சிரிச்சி மழுப்பிட்டேன்.
“ரொம்ப வழியாதிங்க”ன்னு சொல்லிட்டு ஜகஜகவென வேலையை ஆரம்பிச்சுட்டாங்க.. எண்ணெய் காய்ச்ச.. உப்பு போடன்னு அப்ரசண்டி வேலைகள மட்டும் எனக்குத் தந்தாங்க. “நல்லாக் கிளறுங்க”ன்னு சொல்லி என் கை நோவு எடுத்ததுதான் மிச்சம். இப்ப கஷ்டப்பட்டாலும் கடோசில ஒரு சொகம் இருக்குமேன்னு மனச தேத்திக்கிட்டேன். வேற வழி! அப்பவே கற்பனை ஊற ஆரம்பிச்சுருச்சு. ராத்திரி கனவுலல்லாம் மாவடு ஊர்வலம்.
அதுக்கப்புறம் நான் மாவடு கேட்டப்பெல்லாம், “இன்னும் ஊறல... இன்னும் ஊறல...”ன்னே பதில் வந்துச்சு. எனக்கு மனசுக்குள்ள லேசா சந்தேகம் ஊற ஆரம்பிச்சுருச்சு. அவங்க டிவி பார்க்கிற சமயத்துல நைசா ஜாடியைத் தெறந்து பார்த்தா சுத்தமா துடைச்சு கெடந்துச்சு. ஆசை ஆசையா வாங்கிட்டு வந்த மாவடுவைக் காணோம். பதறிப்போய் ஹாலுக்கு ஓடுனேன். சீரியல் பார்த்துட்டு இருந்த வீட்டுக்காரம்மா கொஞ்சமும் அலட்டிக்காம சொல்றாங்க, “என் தங்கச்சிக்கும் மாவடுன்னா உசுருங்க. நம்ம வீட்டுல போட்டிருக்கேன்னு சொன்னதும் ஆள் விட்டு வாங்கிட்டுப் போயிட்டா. அவங்க இடத்துல மாவடு சரியா கெடைக்காதாம். நமக்குத்தான் நம்ம சங்கர் இருக்காரே... எப்போ வேணா வாங்கிப் போட்டுக்கலாம்!”