பிரச்சாரக் களத்தில் அனல் பறந்தாலும் தமிழகத்தில் பெரிதாக எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது தேர்தல்.
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதாக ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து புகார்கள்.
இடைத்தேர்தல் தொகுதிகளில் தேர்தலை அறிவிப்பது உள்ளிட்ட விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளும் மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் இருந்தன. இருந்தபோதும் தேர்தல் தேதி அறிவித்த பிறகு, முடிந்தவரை நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டது.
வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகளை கடிவாளம் போட்டு இழுத்துப் பிடித்தது, தேர்தல் பறக்கும் படையினரை வைத்து ஆங்காங்கே சோதனைகள் நடத்தி சட்ட விரோத பணப் புழக்கத்தை முடிந்தவரைக்கும் கட்டுப்படுத்தியது, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக வந்த புகார்களை கவனித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தது, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது எனத் திறம்படவே செயல்பட்டிருக்கிறது ஆணையம்.
தன்னாட்சி அதிகாரம் கொண்டது தேர்தல் ஆணையம் என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலான நேரங்களில் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் ஏஜென்சியாகவே தேர்தல் ஆணையம் இருந்திருக்கிறது. என்றாலும் இம்முறை ஒட்டுமொத்தமாக ஒரு சார்பு நிலை என்றில்லாமல் ஆளும் தரப்பினர் மீதும் சில இடங்களில் தயக்கமின்றி நடவடிக்கை எடுத்திருக்கிறது ஆணையம். தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
எனினும் இனிவரும் காலங்களில் இப்போது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் கூட வராமல், தேர்தல் ஆணையம் இன்னும் சுதந்திரமாகச் செயல்பட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். ஆள்பவர்களும் ஆணையத்தை சுயமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் சிறக்கும்!