துயரத்தில் ஆழ்த்திய தந்தை... துக்கத்தை அடக்கிக்கொண்ட மகள்!


என்.சுவாமிநாதன்

ஒரு வழியாக ப்ளஸ் டு தேர்வுகளை எழுதிமுடித்த மாணவர்கள் கடந்த சில நாட்களாய்தான் நிம்மதியான தூக்கம் தூங்குகிறார்கள். ஜெகதீஸ்வரிக்கு அந்தத் தூக்கமும் இல்லை. காரணம், அப்பாவின் இழப்பு!

திருச்செந்தூரில் இரண்டாவது சந்தி தெருவில் இருக்கிறது ஜெகதீஸ்வரியின் வீடு. இவரது தந்தை அய்யப்பன் திருச்செந்தூர் கோயில் அர்ச்சகராக இருந்தவர். இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த அய்யப்பனுக்கு ஜெகதீஸ்வரி ஒரே வாரிசு. அப்பாவையும் கவனித்துக் கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் அந்தப் பெண். இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி மாலை திடீரென அய்யப்பனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அடுத்த சில நிமிடங்களில் உயிர் பிரிந்தது. விடிந்தால் ஜெகதீஸ்வரிக்கு வேதியியல் தேர்வு. அப்பாவுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை அந்தப் பெண்தான் செய்தாக வேண்டும். என்ன செய்வதென்று புரியாமல் தந்தையைக் கட்டிக் கொண்டு அழுதார் ஜெகதீஸ்வரி.

உறவுகள் என்னதான் தைரியம் சொன்னாலும் தந்தையின் இழப்பை அந்தப் பெண்ணால் அவ்வளவு எளிதில் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்றாலும் இறுதியில், மனதைத் திடப்படுத்திக் கொண்டு தேர்வு எழுதப் போனவர், நல்லபடியாகத் தேர்வை எழுதி முடித்துவிட்டு வந்து ஒரு மகளாக தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளைச் செய்தார்.

x