புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பழமையான சிவன் கோயிலில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 108 தேங்காய் உடைத்து, சுவாமி தரிசனம் செய்தார். மேலும், அங்குசிறிது நேரம் தியானம் செய்தார்.
புதுவை மாநிலம் பாகூரில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட, சுமார் 1,400ஆண்டுகள் பழமையான வேதா அம்பிகை சமேத ஸ்ரீமூலநாதர் கோயில்உள்ளது. இங்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வந்து, சுவாமி தரிசனம் செய்தார்.
கோயிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் அவரிடம் விளக்கினர்.
தொடர்ந்து, பாலா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அண்ணாமலை 108 தேங்காய் உடைத்து வழிபட்டார். பின்னர் கோயில் வளாகத்தைச் சுற்றி வந்தார். வேதாம்பிகை சந்நிதியில் சிறிது நேரம் தியானம் செய்த அண்ணாமலை, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேதுபகவான், தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ் வரத்தில் ராகு பகவான், அய்யாவாடியில் பிரத்தியங்கரா தேவி, திருவிசைநல்லூரில் கற்கடேஸ்வரர், நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோயில்களிலும் அண்ணா மலை தரிசனம் செய்தார்.