கோவையில் விதி மீறும் தனியார் பேருந்து ஓட்டுநர்களால் தொடரும் விபத்துகள்


கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து நடத்துநர் ஒருவரிடம் நேற்று மது பரிசோதனை நடத்திய போலீஸார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள்.

கோவை: கோவையில் விதிகளை மீறும் தனியார் பேருந்து ஓட்டுநர்களால் பொதுமக்கள், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

கோவையில் தனியார் பேருந்துகள் அரசு நிர்ணயித்த வேகக்கட்டுப்பாடு உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் இயக்கப்படுவதால் விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. நீலகிரியைச் சேர்ந்த சிவக்குமார் (40) என்பவர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தபோது, பின்னோக்கி வந்த தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணையில், தனியார் பேருந்து ஓட்டுநர் திருநாவுக்கரசு (38) மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

போலீஸார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்தியுள்ளார்களா என போக்குவரத்து காவலர்கள் சோதனை செய்தனர்.

இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள், பயணிகள் கூறும்போது,“சில நாட்களுக்கு முன்னர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பயணிகள் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் விபத்து நடந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாகவும், தாறுமாறாகவும், மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் தனியார் பேருந்துகளை ஓட்டுதல், மதுபோதையில் ஓட்டுதல், இதை தட்டிக் கேட்கும் பயணிகள், பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடத்தல் என தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களின் விதிமீறல்கள் தொடர்கின்றன. இதைத் தடுக்க போலீஸார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இது குறித்து போலீஸார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது,‘‘அடுத்தடுத்த நிகழ்வுகளைத் தொடர்ந்து தனியார் பேருந்து, ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்டது. போலீஸார், ஆர்.டி.ஓ அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பேருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயக்க வேண்டும், அதிவேகமாக ஓட்டக் கூடாது. ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட வழித் தடங்களில் முழுமையாக இயக்க வேண்டும். மதுபோதையில் பேருந்து ஓட்டக் கூடாது. பேருந்து ஓட்டும்போது செல்போன்பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்.டி.ஓ மற்றும் போலீஸார் இணைந்து தனியார் பேருந்துகளை தணிக்கை செய்தல், மது போதையில் உள்ளனரா என ஓட்டுநர்களை பரிசோதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நேற்று முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’என்றனர்.

x