இனி டெல்லியில் திமுகவின் குரல் ஒலிக்கவே கூடாது! -கட்சியினருக்கு அமித்ஷா பிறப்பித்த கட்டளை


எம்.சோபியா
readers@kamadenu.in

அதிமுகவுடன் கூட்டணி பேரம் பேச வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக தலைவர் அமித் ஷா, அப்போது வராமல் கடந்த 22-ம் தேதி மதுரைக்கு வந்தார். அவரை வரவேற்க மதுரை விமான நிலையத்துக்கு ஓடோடி வந்தார் துணை முதல்வர் ஓபிஎஸ். பிறகு, தனியார் கல்லூரியில் மதுரை, திருச்சி, கோவை பெருங்கோட்ட பாஜக நிர்வாகிகளைச் சந்தித்தார் அமித் ஷா. 18 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அமித் ஷா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால், மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள், மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சகிதம் குண்டு துளைக்காத டாடா சஃபாரி காரில் கூட்டம் நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார் அமித் ஷா.

கூட்டத் தொடக்கத்தில் பேசிய வானதி சீனிவாசன், “மீண்டும் மோடி ஆட்சி அமைய வேண்டி தமிழகத்தில் உள்ள அனைத்து சக்தி பீடங்களிலும் (அம்மன் கோயில்கள்) தாமரை தீபம் ஏற்றப்படும்” என்றார். அடுத்து பேசிய தமிழிசை, “நமது அகில பாரத தலைவர் எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் காலடி எடுத்து வைத்திருக்கிறாரோ, அங்கெல்லாம் பாஜக ஆட்சி அமைத்திருப்பது வரலாறு. அந்த வரலாறு தமிழகத்திலும் தொடரும்(?)” என்றார். கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களை எழுதிப் போடுவதற்காக ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

அமித் ஷா மைக் பிடித்ததும், போலீஸ்காரர்கள், பத்திரிகையாளர்கள், போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். ஜன்னல் கதவுகளும் அடைக்கப்பட்டன. அவ்வளவு ரகசியமாக கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று நமக்குத் தெரிந்த பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்தோம். “டெல்லியில் இனி திமுகவின் குரல் ஒலிக்கவே கூடாது. அவர்கள் அத்தனை பேரையும் தோற்கடிக்க வேண்டும். டெல்லியில் அவர்களது சுவடே இல்லாமல் செய்ய வேண்டும். செலவு ஒரு பொருட்டல்ல” என்று அவர் பேசியதாகச் சொன்னார்கள்.

கூட்டம் முடியும் தருவாயில் தமிழிசை சௌந்தரராஜனும், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். “அமித் ஷா சார்பில் உங்களை நான் சந்திக்கிறேன்” என்று தொடங்கி வழக்கம்போல, “தாமரை மலர்ந்தே தீரும்” வசனம் பொழிந்தார் தமிழிசை. “2014, 2018 தேர்தல்களின் போது தமிழக பிரச்சாரத்துக்கு வந்த அமித் ஷா, தமிழகத்தில் தான் நாட்டிலேயே மோசமான ஊழல் ஆட்சி நடப்பதாகச் சொன்னாரே?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இல்லை. அப்படிச் சொல்வில்லை. இங்கே தேர்தலில் பல முறைகேடுகள் நடக்கின்றன. ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்கள் என்றுதான் சொன்னார்” என்று தமிழிசை சொல்ல, “அப்படியானால் இந்தத் தேர்தலில் அதிமுக பணம் தராது என்று உறுதியளிக்கிறீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கொக்கி போட்டனர். அதற்கு பதில் சொல்லாமலேயே பேட்டியை முடித்துக்கொண்டு ஓடினார் தமிழிசை.

படம்: ஜி.மூர்த்தி

x