குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
“ஒட்டுமொத்த பிரச்சினைகளின் அணிவகுப்புடன் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தீர்வுகளின் காலத்தை நோக்கி ப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது” என்று ஆனந்தக் குதியல் போடுகிறார்கள் அதிமுககாரர்கள்!
பிப்ரவரி 16-ம் தேதியுடன் வெற்றிகரமாகத் தனது இரண்டு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் அரியணையில் அமர்ந்தபோது ஏகப்பட்ட கேள்விக் குறிகள் வரிசை கட்டின. அவை அனைத்தையும் தனது சாதுர்யத்தால் ஆச்சரியக்குறிகளாக மாற்றியிருக்கிறார்.
ஈபிஎஸ் முதல்வராகப் பதவியேற்றபோது, “இவர் இன்னும் எத்தனை நாளைக்கோ...” என்று அவரது அரசின் ஆயுள் காலத்தைக் குறைத்து மதிப்பிட்டவர்களே நிறைய. ஆனால், சிக்கலான பிரச்சினைகளையும் அலட்டிக்கொள்ளாமல் கடந்து இரண்டு ஆண்டுகள் தாக்குப் பிடித்திருக்கிறார் மனிதர். ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், தனக்கு மேலே முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை தனக்கு அடுத்த நிலையில் துணை முதல்வராக உட்காரவைத்துக்கொண்டு எந்த விதமான பிசிறும் தட்டிவிடாமல் அதுவும் விளிம்புநிலை அறுதிப்பெருமான்மையை வைத்துக் கொண்டு ஆட்சி சக்கரத்தை அழகாக நகர்த்திச் சென்றது அவரது சாதுர்யத்தின் உச்சம்.
ஈபிஎஸ் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்த முதல் 90 நாட்களுக்குள் 11 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டதாகச் சொல்கிறார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ‘முடியும் - முடியாது’ என்று சொல்லி உடனுக்குடன் கோப்புகள் மீது முடிவை எழுதிவிட வேண்டும் என்பது ஈபிஎஸ் பாணி. காவிரியில் தண்ணீருக்காக நாம் போராடுவது முடியாட்சி காலத்திலிருந்தே தொடர்கிறது. ராணி மங்கம்மாள் காலத்தில் கர்நாடகத்தில் அணைகளை உடைத்து தமிழகத்துக்கான தண்ணீரைப் பெற்றதாக வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இதை இப்போது நினைவூட்டும் அதிமுககாரர்கள், “முடியாட்சி காலத்திலேயே தீர்க்கப்படாத அந்தப் பிரச்சினைக்கு இப்போது குடியாட்சி காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வைத்ததன் மூலம் ஒரு தீர்வை எட்டியிருக்கிறார் எடப்பாடியார்” என்கிறார்கள். இதில் அவரது முயற்சி என்பதைவிட இயற்கையும் காலச் சூழலும் அவருக்கு ஒத்துழைத்தது; அதுவே தீர்வை நோக்கி பிரச்சினைகளைத் தள்ளியது.
பாஸிட்டிவ் அப்ரோச்
கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினைகள் தொடர்பாக மத்திய பாஜக அரசிடமிருந்து அழுத்தங்கள் ஏராளம். “கூடங்குளம் பிரச்சினையை ஜெயலலிதா அம்மையார் அமைதியாக முடித்துக் கொடுத்ததுபோல் நீங்கள் இதையும் முடித்துக் கொடுக்க வேண்டும்” என டெல்லி கட்டளையிடாத குறை. அதற்காகக் கோபப்பட்டுவிடாமல் சிரித்துக்கொண்டே அதை தள்ளிக்கொண்டே வந்தார் ஈபிஎஸ். அதேபோல், ராஜீவ் கொலை வழக்கின் குறறவாளிகள் 7 பேர் விடுதலையில் ஈபிஎஸ்ஸின் சமயோஜித செயல்பாட்டைப் பார்த்துவிட்டு தமிழ் தேசியவாதிகளும் பாராட்டினார்கள்.
அரசு நிர்வாகத்தை இப்படியெல்லாம் இதம் பார்த்து நகர்த்திக்கொண்டே கட்சிக்காரர்கள் மத்தியிலும் தன்னை நம்பிக்கைக்குரிய தலைவனாய் வளர்த்துக் கொள்ளவும் அவர் தவறவில்லை. ‘தினகரனை சந்தித்தார் ஓபிஎஸ்’ என்று கட்சிக்குள் ஒரு பூகம்பம் வெடித்தபோது, ஓபிஎஸ் கூட கொஞ்சம் பயந்தார். ஆனால், “அத விடுங்கண்ணே...” என்று சொல்லி அதை எளிதாகக் கடந்தார் ஈபிஎஸ். அதேபோல், “நடைப்பயிற்சியின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் என்னைச் சந்தித்தார் ” என்று தினகரன் கொளுத்திப் போட்ட போதும் ஈபிஎஸ் கொதிக்கவில்லை. மாறாக, “அப்படியே அவர் சந்தித்திருந்தாலும் தப்பில்லை... ஏன்னா, தினகரனுக்கு தேர்தல் வேலை பார்க்கப் போய் வருமான வரித்துறையால் போடப்பட்ட வழக்கு அவர் தலையில இருக்கு. அதையெல்லாம் அவருக்கிட்ட பேசித்தானே சரி பண்ணணும்” என்று பாஸிட்டிவ் அப்ரோச் காட்டினார்.
ஸ்லீப்பர் செல் - டெட் செல்