ஓவியத்தில் புரட்சி செய்த  ‘இரவுக் காவல்’


ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

உலக அளவில் ஒரு சில ஓவியங்களே ஓவியத் துறையின் புரட்சிகளுக்கு வித்திட்டிருக்கின்றன. அத்தகைய ஓவியங்களைத் தழுவி பல ஓவியங்களைப் பல ஓவியர்கள் வரைந்திருந்தாலும், புகழெல்லாம் என்னவோ அந்த சில ஓவியங்களுக் குத்தான். அத்தகைய ஓவியங்களில் ஒன்றுதான் இரவுக் காவல் (Night Watch).

1642-ல், வரையப்பட்ட இந்த ஓவியம் உலகில் வரையப்பட்ட எல்லா ஓவியங்களிலிருந்தும் மிக வித்தியாசமானது. சில ஓவியங்களில் அழகு இருக்கும், சில ஓவியங்களில் அர்த்தம் இருக்கும், சில ஓவியங்களில் புதுமை இருக்கும். இந்த இரவுக் காவல் ஓவியம் இவை அனைத்தையும் உள்ளடக்கியதோடு மட்டுமல்லாமல் ஒரு இயக்கத்தையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. இந்த ஓவியத்தில் உள்ள ஒவ்வொருவருமே வெளிப்படுத்தும் உணர்வுகள் அவர்களை நம் கண் முன்னே நிறுத்துவதாக இருக்கும்.

ரெம்பிராண்ட் வான் ரீஜின் என்ற டட்ச் ஓவியரால் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் மொத்தம் இடம்பெற்றுள்ள நபர்களின் எண்ணிக்கை 34. இந்த 34 பேருடைய உணர்வுகளும், அவர்களின் மனநிலையும் பிரதிபலிக்கும் அதிசயம் இந்த ஓவியம். இந்த ஓவியத்தின் அளவு அடுத்த அதிசயம். 11 அடி 10 அங்குலம் உயரமும், 14 அடி 4 அங்குலம் அகலமும் கொண்டது. 1715-ல், இந்த ஓவியம் இடம் மாற்றப்பட்டபோது புதிய மியூசியத்தில் இடம் போதவில்லை இதன் நான்கு பக்கங்களிலும் சிறிதளவு வெட்டி எடுக்கப்பட்டது.

பெரிய அளவுகளிலான ஓவியங்களை பல்வேறு ஓவியர்கள் வரைந்திருந்தாலும் இந்த ஓவியத்துக்கு என்றுமே வரலாற்றுத் தனித்துவ அடையாளம் கிடைத்துக்கொண்டே இருந்தது. காரணம், இந்த ஓவியத்தில் ஒளியையும் நிழலையும் கையாண்டிருக்கும் விதம். இந்த ஓவியத்தில் நிகழும் நிகழ்வானது பகலில் நடக்கிறதா, இரவில் நடக்கிறதா என்ற குழப்பத்தைப் பார்வையாளர்களுக்கு வரவைக்கிறது.

இந்த ஓவியத்தை வரையுமாறு குடிமக்கள் காவல் படையின் தலைவரும் அதன் 17 உறுப்பினர்களும் கூறினர். ஆனால், இந்த ஓவியத்தில் இடம்பெற்ற பலர் இந்த ஓவியத்தை வரைவதற்கு எந்தப் பணமும் ரெம்பிராண்டுக்குத் தரவில்லை. இதனால் இந்த ஓவியத்தை வரைவதற்காக அவர் பெற்ற கடனைக் கடைசி வரையிலும் அவரால் அடைக்க முடியவில்லை. இந்த ஓவியத்தில் காவல் படையில் இல்லாதவர்களும் கூட இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஓவியத்தைப் பலர் பல முறை சிதைக்க முயன்றுள்ளனர். 1911-ல், ஒருவர் தச்சரின் கத்தியைக் கொண்டு ஓவியத்தைக் கிழித்தெறிந்தார். அதன்பிறகு 1975-ல், வேலையிழந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் ரொட்டி வெட்டும் கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக கிழித்தார். இதனைச் சரி செய்ய நான்கு ஆண்டுகளாயிற்று. ஆனாலும் ஓவியத்தில் ஆங்காங்கே ஒட்டுப்போட்ட அடையாளங்கள் தெரியவே செய்தன. 1990-ல், மீண்டும் ஒருவர் அமிலத்தை ஓவியத்தின் மீது தெளித்தார். காவலர்கள் உடனே வந்து தண்ணீரை தெளித்ததால் பெரிய சேதமின்றி ஓவியத்தை மீட்டனர்.

இந்த ஓவியம் தற்போது நெதர்லாந்த் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜிக்ஸ் மியூசியத்தில் உள்ளது. அங்கு இடம்பெற்றுள்ள ஓவியங்களிலேயே மிகவும் புகழ்பெற்ற ஓவியமாக இதுவே உள்ளது. 

x