என்.பாரதி
readers@kamadenu.in
தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் எழுதுபவர் உஷாதேவி. குமரி மாவட்டம், சுசீந்திரத்தில் பிறந்த இவர், கேரளத்திலும், தமிழ் மண்ணிலுமாக வளர்ந்தவர். தனது கல்வியையும் மலையாளத்தில் கற்ற இவர், மத்திய அரசின் கைவினைப் பொருள்கள் வளர்ச்சி ஆணையத்தில் மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மலையாளத்தில், ‘கடல் விளி’, ‘அபரிசிதன்டே கைவிரல்’ என்னும் இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ‘கூடுமாற்றகாலம்’ என்னும் நாவலையும் தந்திருக்கிறார்.
தமிழில் ‘ஊதா வண்ண இலைகளின் பாடல்’ உள்பட இரு சிறுகதைத் தொகுப்புகளையும் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதில், ‘வீடு பள்ளத்தில் இருக்கிறது’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதைப் பெற்றது. திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இப்போது இவரது ‘பிச்சியின் பாடு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு அச்சுக்குக் காத்திருக்கிறது. உஷாதேவிக்குப் பிடித்தவை பத்து இங்கே…
ஆளுமை: தனித்துவமான கவித்திறத்தால் உயர்ந்து நிற்கும் மகாகவி பாரதியார்.
பிடித்த நூல்கள்: அப்துல்கலாமின் அக்னிச்சிறகுகள், சாண்டியின் இன்னத்தை சிந்தாவிஷயம் (மலையாளம்), சுஜாதாவின் கட்டுரைகள், தி.ஜானகிராமன், நீல.பத்மநாபன், மாதவிகுட்டி, எம்.டி.வாசுதேவன்நாயர் ஆகியோரது படைப்புகள்.
மேற்கோள்: அன்பேசிவம், அதனோடு ‘மனிதனுக்கு ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்’ என்னும் நாராயணகுரு காட்டிய பாதை.
இடம்: சுசீந்திரம் கோயில் தெப்பக்குளம், இதுபோக, இயற்கை எழில்கொஞ்சும் கேரளத்தின் பல இடங்களும் தமிழகம், புதுச்சேரியிலும் சொல்ல நிறைய இடங்களுண்டு.
இசை: பழைய மலையாள, தமிழ்த்திரைப்பட பாடல்களைக் கேட்பது ரொம்பப் பிடிக்கும். அத்தோடு தேவாரப்பாடல்களை மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு. மலையாளத்தில் வயலார் ராமவர்மாவின் பாடல்கள் மீது அலாதி ஈர்ப்புண்டு.
செயல்: எழுத்து, பேச்சுத்தளத்தில் இயங்குவது, கிராஃப்ட் செய்வது, ஓவியம் வரைவது, எம்பிராய்ட்ரி செய்வது, இதனோடு வாசிப்புக்கு பெரும்பொழுதுகளைக் கடத்துவதும் செயலாக நகர்கிறது.
பிடித்த படம்: மலையாளத்தில் ‘ராப்பகல்’ என்னை வெகுவாகக் கவர்ந்த படம். தமிழில் ‘பாலும் பழமும்’ படம் ரொம்பப் பிடிக்கும்.
நபர்: எனக்கு வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிய என் அப்பா ஜி.கோபால பிள்ளை. என்னுடைய பள்ளிக்காலத்தில் அதிக மதிப்பெண் எடுத்தால் அப்பா நல்ல புத்தகங்களை வாங்கி பரிசளிப்பார். அதை வாசித்தேனா எனப் பின்தொடரவும் செய்வார். இதேபோல் என் அம்மா பொன்னம்மாளும், மூத்த சகோதரரும் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் பாலமோகன்தம்பியும் எனக்குப் பிடித்த நபர்கள்.
தலைவர்: அடுத்தவனைக் கொல்வது வீரம் அல்ல, அடுத்தவன் செய்யும் கொடுமையை மறந்து பகைவனுக்கும் அருளும் நெஞ்சமே வீரர் நெஞ்சம் என வீரத்துக்கே புது இலக்கணம் வகுத்த மகாத்மா காந்தியடிகள்.
கவிஞர்: ஓ.என்.வி.குருப்பு. மலையாள கவிஞரான இவரது பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். அதிலும் இவரது ‘குஞ்ஞேடத்தியெ தன்னெயல்லோ’ எனக்கு ரொம்பப் பிடித்த கவிதை.
படம்: ஆர்.ராஜேஷ்குமார்