சேலம்: சேலத்தில், சீட் கவர் தைக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் முற்றிலும் எரிந்தது. இந்த விபத்தில் இரு கார்கள், இரு சக்கர வாகனம் ஒன்று உள்பட ரூ.10 லட்சத்துக்கும் மேல் பொருள் சேதம் ஏற்பட்டது.
சேலம் மாநகரில், 5 ரோடு அழகாபுரம் ஸ்ரீராம் நகரில், ராஜா என்பவர், கார்கள், இரு சக்கர வாகனங்களுக்கு, சீட் கவர் தைத்து கொடுக்கும் கடையை நடத்தி வந்தார். இதன் அருகே மர அறுவை மில் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சீட் கவர் கடையில் இன்று மதியம் 4 கார்களும், இரு சக்கர வாகனம் ஒன்றும் நின்றிருந்தன. அப்போது, ராஜா வெளியே சென்றிருந்தபோது, அவரது கடையின் அருகே தீப்பற்றி புகை மூட்டம் எழுந்துள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில், அங்கு நின்றிருந்த 2 கார்கள், அந்த இடத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, மளமளவென பரவிய தீயில், இரு கார்கள் தீயில் சிக்கி எரியத் தொடங்கின. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் எழுந்தது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, தீயைக்கட்டுப்படுத்த முயற்சித்தனர். எனினும், சீட் கவர் கடையில் இருந்த இரு கார்கள், தையல் இயந்திரம், கார்களின் இருக்கைகள், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை தீயில் கருகி சேதமடைந்தன.
அருகில் இருந்த மரக்கடையிலும் தீ பரவிய நிலையில், அது உடனடியாக அணைக்கப்பட்டதால், பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக, முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து, சேலம் அழகாபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.