தபால்காரர் கதவிடுக்கின் வழியே போட்டுவிட்டுப்போன அம்மாவின் கடுதாசு தரையில் கிடந்தது. ஒவ்வொரு மாதமும் சரியாக இருபத்தைந்தாம் தேதி அம்மாவின் கடுதாசு வந்துவிடும். சிலசமயம் கடுதாசை வைத்து சுப்பிரமணி அன்றைக்கு தேதி இருபத்தைந்து என்பதை ஞாபகமூட்டிக்கொள்வான்.
"இந்த செல்போன் யுகத்துல கடுதாசு போடுறது நீங்க ஒருத்தராத்தான் இருப்பீங்க..." என்று போஸ்ட்மாஸ்டர் கிண்டல் செய்வதாக அம்மா சொல்லுவாள்.
"நம்பரை போட்டா நிமிஷமா பேசிடலாம். நீ ஏம்மா இப்படி மெனக்கெடுற..." என்று சுப்பிரமணி ஒருமுறை அலுத்துக்கொண்டான்.
"கடுதாசு போடுறதுல ஒரு சொகமிருக்குடா. அந்தக் காலத்து ரெண்டுகட்டு வீட்டுல விஸ்தாரமா பொழங்குற மாதிரியான சொகம். சொன்னா ஒனக்குப் புரியாது" என்றாள் அம்மா.