ஆவடி போர் வாகனங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் பொன் விழா: இயக்குநர்கள், ராணுவம், கடற்படை அதிகாரிகள் பங்கேற்பு


ஆவடி: ஆவடி போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பொன் விழா நேற்று ஆவடியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் ஆவடி போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது.

போர் வாகனங்கள் துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ள இந்நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது. இந்நிலையில், ஆவடி போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பொன் விழா நேற்று நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழா, ஆவடி போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளின் கண்காட்சி மற்றும் சாதனைகளை விளக்கும் காணொலி காட்சிகள் ஒளிபரப்பு, 21-ம் நூற்றாண்டில் பீரங்கிகளின் செயல்பாடு மற்றும் தொழில் நுட்பத் தேவைகள் என்ற தலைப்பில் குழு விவாதம் என கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான சமீர் வி காமத் பேசும்போது, “கவசப் போர் வாகனங்கள் வகைகளில் சுய சார்புநிலையை அடைவதற்காக ஆவடி போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும், இந்நிறுவனம், பல புதுமைகளை மேற்கொள்ள அதிக கவனம் செலுத்தவேண்டும்” என்றார்.

இவ்விழாவில், ஆயுதம் மற்றும் போர் பொறியியல் துறை இயக்குநர் பிரதீக் கிஷோர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர்கள், ராணுவம், கடற்படை அதிகாரிகள், தொழில்துறை பங்குதாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.