பதற வைக்கும் மாரடைப்பு!


டாக்டர் கு. கணேசன்

நெஞ்சில் வலி வந்த நோயாளிகள் இரண்டு விதம். மார்பின் மத்தியில் லேசாக வலி வந்தாலே ‘மாரடைப்பாக இருக்குமோ?’ என்று பயந்து, மருத்துவரைத் தேடி ஓடுபவர்கள் ஒரு ரகம். மேல்வயிற்றில் வலி தொடங்கி, மார்பில் பரவி, இடது கைக்குப் பாய்ந்தாலும், ‘அது வாயுவாகத்தான் இருக்கும்’ என்று அலட்சியப்படுத்தி, பூண்டு மாத்திரை சாப்பிட்டு, நாட்களைக் கடத்துபவர்கள் இன்னொரு ரகம். முதல் ரகத்தில் பயனாளிக்குப் பயம்தான் கொல்லும். இரண்டாவதில் மாரடைப்பே கொல்லும். இப்படி இல்லாமல், மாரடைப்பின் முகாந்திரத்தைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால், ‘அச்சமும் இல்லை! ஆபத்தும் இல்லை!’ எனும் தனி ரகத்தில் சேர்ந்துகொள்ளலாம். நீங்கள் எப்படி?

மக்களைப் பாதிக்கும் தொற்றாநோய்க் கூட்டத்தின் தலைவன் மாரடைப்பு; மனித உயிரை எளிதாகப் பறித்துவிடும் எமதூதுவன் என்று சொன்னால் மிகையில்லை. மனித வாழ்க்கையில் முக்கியமான காலப் பகுதியில் – 40-லிருந்து 50 வயதுக்குள் – அநேகம் பேரை மாரடைப்பு தாக்கிவிடுகிறது. மாரடைப்பு வந்த 100-ல் 10 பேர் சிகிச்சைக்குப் பலனில்லாமல் இறந்துவிடுகின்றனர். முதல்முறையாக மாரடைப்பு வந்து மீண்டவர்கள்கூட பழைய உடற்தகுதியை இழந்துவிடுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து விடுகிறது. அவர்கள் காலமெல்லாம் மருந்துப் பொட்டலத்தோடுதான் அலைய வேண்டி உள்ளது. அதுவே பலருக்கும் மடியில் கட்டிக்கொண்ட கனம் ஆகிறது. அதுமட்டுமில்லாமல், “இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே! இதைச் சாப்பிடாதே! அதைச் சாப்பிடாதே! படியில் ஏறாதே! பளு தூக்காதே!” என்று மருத்துவமனையில்/ வீட்டில்/ வெளியில் ஏகப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக நேர்கிறது. அதனாலேயே ‘மாரடைப்பு’ என்று கேட்ட மாத்திரத்தில் எல்லோருக்கும் அடிவயிறு கலங்கிவிடுகிறது.

யாருக்கு வருகிறது?

x