2 வாரத்தில் மீன்பிடித் தடைகாலம் நிறைவு: ராமேசுவரத்தில் விசைப் படகுகள் ஆய்வு துவக்கம்


ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ராமேசுவரம்: மீன்பிடித் தடைகாலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ராமேசுவரம் விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணியை மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று துவங்கினர்.

தமிழகத்தில் கடந்த ஏப். 15 துவங்கி ஜுன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இந்தத் தடைக் காலம் முடிவடைய இன்னும் 2 வாரங்களே உள்ளதால் கடலுக்குச் செல்வதற்கான ஆயத்தப்பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தங்களுடைய படகுகளை பழுதுபார்த்தல், வண்ணம் பூசுதல், புதிய வலைகளை பின்னுதல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விசைப்படகின் முகப்பில் க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

இந்நிலையில், தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்குச் செல்ல உள்ள விசைப்படகுகளின் ஆய்வு, வெள்ளிக்கிழமை ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. ஆய்வின் போது படகு உரிமையாளர்கள் பெயர், படகின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு உரிமம், உள்ளிட்டவற்றை படகு உரிமையாளர்களிடம் இருந்து மீன்வளத் துறையினர் பெற்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், விசைப்படகுகளில் பொருத்தப்பட்ட என்ஜின்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு உள்ளதா? விசைப்படகுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நீளம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ததுடன், ஒரு விசைப் படகின் பதிவெண்ணை, மற்றொரு படகிற்கு எழுதும் முறைகேட்டை தவிர்ப்பதற்காக, படகின் விவரங்கள் அடங்கி க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கர்கள் படகுகளின் முன்பகுதியில் ஒட்டப்பட்டது. மேலும், முறையான பராமரிப்பு செய்யாத விசைப் படகுகளை சரிசெய்ய உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.