மிரட்டல்... மிரட்டல்... எச்சரிக்கை! ரூபா ஐபிஎஸ் சிறப்பு பேட்டி


இரா.வினோத்
vinoth.r@thehindutamil.co.in


ரூபா ஐபிஎஸ். கர்நாடகாவை அதிரவைத்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி மட்டுமல்ல, எழுத்தாளர், பேச்சாளர், பாடகர், நடன கலைஞர், மாடல் எனப் பன்முகம் கொண்ட அசத்தல் ஆளுமை. சசிகலாவின் சிறை முறைகேடு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் வேளையில், அதற்கு விதை போட்ட ரூபாவை பேட்டிகாண ஊடகங்கள் காத்துக் கிடக்கின்றன. தற்போது ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு பிரிவின் ஐஜியாக பணியாற்றும் அவரை, பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தேன்.

உங்களது 18 ஆண்டுகால காவல் பணியில் 41 பணியிட மாற்றங்கள், அரசியல் வாதிகளுடன் நேரடி மோதல்கள், உயர் அதிகாரிகளின் அழுத்தங்கள் இத்தனையையும் சந்தித்திருந்தாலும் எதுவுமே நடக்காதது போல ரொம்ப‌ கூலாக‌ இருக்கீங்களே மேடம்?

ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சவால்கள், சங்கடங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்ட பிறகே இந்த வேலைக்கு வந்தேன். பணியிட மாற்றம், மிரட்டல், அழுத்தம், நெருக்கடி எல்லாம் இந்த வேலைக்கே உரிய ஆபத்துகள். அதையெல்லாம் தலையில் போட்டுக்கொண்டால், நமது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படும். அதனால் எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், எளிதாக எடுத்துக்கொண்டு கடந்துவிடுவேன்.

நீங்கள் எளிதாக பதில் சொன்னாலும், அன்றாட நெருக்கடிகளில் இருந்து உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள என்ன செய்வீர்கள்?

நான் பெரிய கலா ரசிகை. சின்ன வயதிலேயே முறைப்படி பரத நாட்டியம், இந்துஸ்தானி மியூசிக் கற்றுக்கொண்டேன். நிறைய வாசிப்பேன். 3 மாதங்களுக்கு ஒரு முறை நீண்ட பயணம் மேற்கொள்வேன். ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக நினைத்து, மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும் எதிர்கொள்வேன். நெருக்கடிகளில் சிக்கும்போது இசையும், என் கணவர் முனிஷ் மவுட்கிலும் அதிலிருந்து என்னை மீட்டு விடுகிறார்கள். என்னோடு பணியாற்றும் அதிகாரிகள் மவுனித்து விட்டாலும் என் கணவரும், குடும்பத்தாரும் எனக்கு அரணாக இருக்கிறார்கள்.

சரி, உங்களைப் பற்றிச் சொல்லுங்க... ரூபா ஐபிஎஸ் ஆனது எப்படி?

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தாவணகெரே தான். அப்பாவும், அம்மாவும் மத்திய அரசு ஊழியர்கள். வீட்டில் முதல் பிள்ளை என்பதால் என்னைச் செல்லமாக வளர்த்தனர். மூணாம் கிளாஸ் படிக்கும்போது என்னோட ஆசிரியர், ‘‘எதிர்காலத்தில் என்னாவாக போகிறாய்?'' எனக் கேட்டார். நான் அப்பா, அம்மாவிடம் கேட்டுவிட்டு, நன்றாக யோசித்து அடுத்த நாள் போய், ‘‘ஐபிஎஸ் ஆகப் போகிறேன்'' என பதிலளித்தேன். எல்லோரும் டீச்சர், நர்ஸ்,டாக்டர் எனச் சொல்லிக்கொண்டிருந்த போது, நான் மட்டும் ‘ஐபிஎஸ் ஆகப் போகிறேன்' எனச் சொன்னதால், ஆசிரியர் எல்லோரையும் எழுந்து கைத்தட்ட வைத்தார். அன்று கிடைத்த உற்சாகத்தால் ஐபிஎஸ் ஆவது என்பதில் உறுதியாக முடிவெடுத்து, என்சிசியில் சேர்ந்தேன். அதில் சிறப்பாகச் செயல்பட்டதால் 1990 டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் அணிவகுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த கிரண்பேடி எங்கள் குழுவைப் பாராட்டினார். அவரைப் போல ஆக வேண்டும் என நன்றாக படித்ததால் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 23-ம் இடம் பிடித்தேன். பன்னிரண்டாம் வகுப்பிலும் மாவட்ட அளவில் முதல் இடம் வந்தேன். ஆனாலும் டாக்டர், இன்ஜினீயருக்குப் படிக்க போகவில்லை. கலைக் கல்லூரியில் சேர்ந்து ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாரானேன். 2000-ல், தேசிய அளவில் 43-ம் இடமும், கர்நாடக அளவில் முதலிடமும் பிடித்து ஐபிஎஸ் ஆனேன். கல்வியில் தீவிரமாக இருந்த அதே நாட்களில், பாட்டு, நடனம் மட்டுமில்லாது, ‘மிஸ் தாவண்கெரே'வாக 2 முறை வாகை சூடியிருக்கிறேன் 
தெரியுமா!

x