பெண்களின் வலியைப் பேசும் ஓவியம்!


ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in


 
பெண்கள் தாங்கள் நினைப்பதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்த முடியாத நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்
கள். குறிப்பாக, ஆணாதிக்க குடும்பத்தில் அகப்பட்டுக் கிடக்கும் பெண்களின் விதியும் வலியும் மிகக் கொடுமை
யானது. இத்தகைய பெண்களின் உணர்வை வெளிப்படுத்தும் ஓவியம்தான், அம்ரிதா ஷெர்-கில் வரைந்த ‘Three Girls'.
இந்த ஓவியத்தில் மூன்று பெண்கள் அழகான வண்ண உடையில் இருந்தாலும், அவர்களுடைய முகம் வெளிறிய, வெறுமையான, அழுத்தமான மனநிலை யைப் பிரதிபலிப்பதை உணரலாம். மெக்சிகோவைச் சேர்ந்த பெண் ஓவியரான ஃபிரீடா காலோ தன் சுய உருவ ஓவியங்களை வரைந்து புகழ்பெற்றவர். 

அம்ரிதாவின் ஓவியங்களும் ஃபிரீடாவின் ஓவியங்களைப் போலவே இருப்பதால் ‘இந்தியாவின் ஃப்ரீடா காலோ’ என அழைக்கப்பட்டார் அம்ரிதா ஷெர்-கில். ஃப்ரீடாவைப் போலவே தன்னையே ஓவியமாக வரைந்துகொள்வதிலும் ஆர்வமுடையவராக அம்ரிதா இருந்தார். சரி, இந்த ஓவியத்தை வரைந்த கதைக்கு வருவோம்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அம்ரிதா ஷெர்-கில் ஐரோப்பாவில் வளர்ந்தவர். 1934-ல், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவில் தனது சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்தார். அப்போது அவரைப் பார்க்க அவரது உறவுப் பெண்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்களிடம் எந்த உற்சாகமோ, சந்தோஷமோ இல்லை. ஆண்களின் முன்னால் அவர்கள் மிகுந்த அமைதியாக, அடக்கமாக இருந்தனர். இதைப் பார்த்த அம்ரிதா, அந்தப் பெண்களின் நிலையைப் புரிந்துகொண்டு, அவர்களின் வலியையும் விதியையும் ஓவியமாக வரைய முடிவு செய்தார். ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களும் கூட பெரும் துக்கத்தைப் பிரதிபலிப்பதாகவே இருந்தன.

இந்த ஓவியம் 1937-ல் பாம்பே ஆர்ட் சொசைட்டியின் தங்கப் பதக்கம் வென்றது. புகழ்பெற்று விளங்கிய பெண் ஓவியர்களில் வெகுசிலரில் ஒருவராக திகழ்ந்த அம்ரிதா ஷெர்-கில் தனது 28 வயதிலேயே இறந்துபோனதுதான் சோகம்.

x