ஒய்.ஆண்டனி செல்வராஜ்
antonyselvaraj.y@thehindutamil.co.in
உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எத்தனையோ காளைகள் நின்று விளையாடி மாடுபிடி வீரர்களை சும்மா... தெறிக்கவிட்டன. அதில் செல்லியம்மன் கோயில்காளைக்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒன்றல்ல... இரண்டல்ல, அண்ணன் தம்பிகள் 60 பேர் சேர்ந்து வளர்த்த காளை இது என்பதுதான் அந்தச் சிறப்பு!
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்தாலும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், விராலிமலை, ஜல்லிக்கட்டுகள் கவனம் ஈர்ப்பவை. அதிலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை த்ரில்லர் சினிமாவைப் போல் இருக்கையின் நுனிக்கு வந்து ரசிக்கலாம். இங்கு காளைகளை அடக்கு வதையும், வாடிவாசலில் காளைகளை அவிழ்த்து விடுவதையுமே ஜல்லிக்கட்டுப் பிரியர்கள் பெருமையாகக் கருதுவார்கள். அந்த ஒரு நாள் பெருமைக்காக வருடம் முழுவதும் லட்சக்கணக்கில் செலவு செய்து காளைகளைப் பராமரிப்பவர்களும் உண்டு.
இங்கே காளைகளை அடக்குபவர்களும் அடக்க முடியாத காளைகளுக்குச் சொந்தக்காரர்களும் அடுத்த ஜல்லிக்கட்டு வரைக்கும் அதை மறக்க மாட்டார்கள். அதிகமான காளைகளை அடக்கும் வீரர் அந்த ஆண்டின் அலங்காநல்லூர் ஹீரோவாக வலம் வருவார். அந்த வகையில் இந்த ஆண்டு 14 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் ரஞ்சித்குமார் ஹீரோவானார். அதுபோல், அத்தனை வீரர்களையும் மிரள வைத்து, புறமுதுகிட்டு ஓடவிட்ட பரம்புப்பட்டி செல்லியம்மன் கோயில் காளை சிறந்த காளையாக வெற்றிபெற்றது. ரஞ்சித்தையும், செல்லியம்மன் கோயில் காளைக்குச் சொந்தக்காரர்களையும் சென்னைக்கு வரவழைத்து முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் கார்களைப் பரிசளித்துப் பாராட்டினர்.