உங்க வீட்டுல ஒருத்தரா நினைச்சுக்குங்கோ. தேங்க்ஸ்லாம் வேண்டாம்.'
அம்மு நேராய் என்னைப் பார்த்துச் சொன்னாள். எப்போது என்னோடு பேசினாலும் இதே போலத்தான்.
என்ன நினைத்து இப்படிச் சொன்னாளோ என் மனப் பறவை உடனே கூடு கட்ட ஆரம்பித்துவிட்டது.
அவள் அக்காவின் நோட்ஸ் இப்போது என் கையில். என் மதிப்பெண்கள் குறைந்துகொண்டே வருவதில் தேவி சரஸ்வதிக்குத்தான் திண்டாட்டம். அம்மா தன் பாரி உடம்பைத் தூக்கிக்கொண்டு படியேறி பவித்திர உற்சவ மண்டபத்தின் மூலையில் இருந்தாலும் போய் விளக்கேற்றி வேண்டுதல் வைத்துவிட்டு வருவாள்.
“ஏன்டா கண்ணா மார்க் போயிடுச்சாமே” என்று நச்சு என்கிற நரசிம்மன் சத்தமாய்க் கேட்கும்போது மானம் போகும்.
தீர்த்தக்குடம் கழுத்தில். வேக வேகமாய்க் கொள்ளிடத்திலிருந்து ஓடி வரும்போது இவன் குடம் கனப்பது கூடத் தெரியாமல் அநாயாசமாய்த் தூக்கிக்கொண்டு இந்த வம்பும்.
உடம்பு மினுமினுத்துக்கொண்டிருக்கும். தெருவில் யார் மீதும் கவனம் பதியாது. மறுபடி போக வேண்டியிருக்கும். ஓட்டமும் நடையுமாய்.
“ஜீயபுரம் போகும்போது சொல்றீங்களா. எனக்கும் வரணும்னு ஆசையா இருக்கு.”
“அது ராத்திரில.”
“நீங்கதான் வரீங்களே. பார்த்துக்க மாட்டீங்களா?”
‘வாடா போடா’தான் இதுவரை கேட்டது. ‘நீங்க வாங்க’ எல்லாம் புதுசு. மனசுக்குள் இருக்கும் சிறுவனுக்கும், பிடித்தவளைப் பார்த்ததும் பெரிய மனிதனாகத் துடிப்பவனுக்கும் இடையே கடுமையான போட்டி.
அம்முவை நேரே பார்க்க ஒரு கூச்சம் பிடுங்கித் தின்னும். ஓரக் கண்ணால் அவள் பார்க்காதபோது பார்த்து, பதிவுகளை அவ்வப்போது எடுத்து மனத் திரையில் ஓடவிட்டு… அவை கூட இன்னமும் பளிச்சென்று.
அந்த முறை தேர்வுத்தாளைத் திருத்தியவரின் கவனக் குறைவில் மதிப்பெண் ஐம்பதைத் தாண்டிவிட்டது.
அம்மா சரஸ்வதியைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு அம்முவின் கையைப் பற்றிக்கொண்டாள்.
“என் செல்லமே. புண்ணியம் கட்டிண்டே.”
கன்னம் வழித்துக் கொஞ்சினாள். கையைப் புடவையில் துடைத்துக்கொள்ளுமுன் ஓடிப்போய் அம்மாவின் கையைப் பற்றிக் குலுக்கினேன்.
“எனக்கும் வாழ்த்து சொல்லும்மா.”
அம்முவின் வாசனை!
“அவரும்தானே படிச்சார்.”
“கிழிச்சான். நீ நோட்ஸ் கொடுத்தியோ, மார்க் ஏறித்தோ.”
இந்த நேரம் அம்மாவை எதிர்த்துப் பேசவில்லை. அம்முவின் புகழ் கேட்க இனிமை. இன்னும் கொஞ்ச நேரம் நிற்பாள்.
“அம்மா ஜாரிணிக் கரண்டி வாங்கிண்டு வரச் சொன்னா.”
“போடா எடுத்துண்டு வா”
உக்கிராண அறைக் கதவைத் திறந்து வைத்து நின்றால் கூடத்தில் அம்மு நிற்பது தெரியும். கரண்டியைத் தேடாமல் நின்றேன்.
“என்னடா... இன்னுமா கிடைக்கல?”
“எங்கே வச்சிருக்க? கண்ணுலயே படலே.”
அம்மாவே வந்துவிட்டாள்.
வந்த வேகத்தில் கரண்டியை எடுத்து அம்முவின் கையில் கொடுத்துவிட்டாள்.
ச்சே… உடனே கிளம்பிவிடுவாளே.
“ரேஷன் அரிசி அம்மா வாங்கி வச்சிருக்கா. உங்களுக்கு வேணுமான்னு கேட்டுண்டு வரச் சொன்னா.”
“என்னால இப்போ வர முடியாதே.”
“ அம்மா நான் வேணும்னா போய்…”
“ நல்லதாப் போச்சு. ஒரு வேலை செய்ய உனக்கு உடம்பு வணங்காதேன்னு நினைச்சேன்.”
அம்மா முகத்தில் நிம்மதி.
அம்முவுடன் சித்திரை வீதியில் நடக்கும்போது அது நீண்டுகொண்டே போனது. அடிப் பிரதட்சிணம் செய்வதுபோல் நடந்தேன்.
“என்னாச்சு. ரொம்ப மெதுவா நடக்கிறீங்க.”
“கொள்ளிடத்துக்குப் போனப்போ கல்லு குத்திருச்சு.”
“அடடா… பார்த்துப் போகக் கூடாதா!”
அம்முவுக்கு ரெட்டை ஜடை போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்தபோது…
“திடீர் திடீர்னு சைலன்ட் ஆயிடறீங்க?” என்றாள்.
“ஹ்ம்ம். படிப்பும் சுமார். லைஃப்ல எப்படி செட்டில் ஆவேன்னு ஒரு பயம்.”
“நிச்சயம் நீங்க நல்லா வருவீங்க. நான் சொல்றேன்… எனக்கு நம்பிக்கை இருக்கு.”
ஆள் நடமாட்டமில்லாத திருப்பம். சட்டென்று அவள் கையைப் பற்றிக்கொண்டுவிட்டேன். கண்களில் தானாகவே ஜல புஷ்பம்.
“ரொம்ப தேங்க்ஸ்!”
கையை நாசூக்காய் விடுவித்துக்கொண்டாள்.
“ஹப்பா... ரொம்ப எமோஷனல்.”
“நீ சொன்னது ஏதோ அருள் வாக்கு மாதிரி இருந்துச்சு.”
“ஹ்ம்ம்”
“ஸாரி... எதுவும் தப்பா...”
ஜிமிக்கி வேகமாய் ஆடியது.
“அதெல்லாம் இல்ல... உங்கமேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கணும்.”
ரேஷன் அரிசியில் எங்கள் குடும்பப் பெயர் எழுதி இருந்திருக்க வேண்டும். அதில் அம்முவின் பெயரும் இணைந்திருக்கும் என்று அசட்டுத்தனமாய் ஒரு கற்பனை.
ஆண்டுத் தேர்வில் வெற்றி.
“என்னடா இப்பல்லாம் கோவில் பக்கம் காணோம்? குடம் எடுத்ததும் ஓடிடறே.”
“படிக்கணும்.”
மாதாமாதம் ரேஷன் அரிசிக்குப் போய்விடுவேன். அம்முவின் புன்னகை பதித்த அரிசி மூட்டையைத் தோளில் ஏற்றிக்கொண்டு வரும்போது திருமஞ்சனக் குடம் சுமந்து வருவது போலிருக்கும்.
ஜங்ஷன் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆபீஸ் ரயிலில் (அதாவது காலையில் அலுவலக நேரத்துக்குக் கிளம்பும் ரயிலில்) போகும்போது மீசை முளைத்திருந்தது. டவுன் கல்லூரிப் பெண்கள் யாரும் ஈர்க்கவில்லை.
அம்மு போல் யாருமில்லை.
“வீட்டைக் காலி பண்ணச் சொல்றா மாமி” என்றாள் ஒரு நாள் வந்து.
பக்கென்றது. அப்புறம்…
“அப்பாவும் கேகே நகர் போலாம்னு சொல்றார். அவர் கம்பெனிக்குப் போகவும் வசதின்னு.”
அம்மாவுக்கு ரேஷன் அரிசி இனி கிடைக்காது என்கிற கவலை முகம் முழுக்க.
போய்விட்டார்கள். வீடு காலி செய்யும்போது சாமான்களை ஏற்ற ஒத்தாசைக்குப் போனேன். டெம்போகாரர் தானே இறக்கி வைத்துவிடுவதாய்ச் சொன்னதும் கேகே நகர் போகும் வாய்ப்பு பறிபோனது.
“வரேன்” என்றாள் போகும் முன்.
அதற்கடுத்து வந்த தேர்வில் மதிப்பெண் குறைந்தது. அம்முவிடமிருந்து ஒரு கார்டும் வந்தது.
“நல்லாப் படிக்கிறீங்கன்னு நம்பறேன்!”
ஒற்றை வரி. அனுப்புநர் பெயர் இல்லை. கேகே நகர் தபால் ஆபீஸ் முத்திரை பளிச்சென்று.
பிறந்த தேதிக்கான பலன்கள் புத்தகம் கல்லூரியில் ஒரு நண்பன் காட்டினான்.
“9-ம் தேதியில் பிறந்தவர்களைச் சுலபமாய் அன்பில் வசப்படுத்தலாம். பரிவுக்கு ஏங்குபவர்கள்.”
இன்னும் சில வரிகள்.
“என்னடா. அதையே திருப்பித் திருப்பி படிக்கிறே?”
“கரெக்டா போட்டுருக்கான்.”
“ஹா ஹா! எல்லா ராசிக்கும் இப்படித்தான்
புருடா விட்டிருப்பான். யார் படிச்சாலும் பொருந்தற மாதிரி.”
அலட்சியமாய்ச் சொன்னவனை முறைத்துப் பார்த்தேன். ரசனை இல்லாதவன்.
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை. இரண்டாம் வகுப்பில்தான். 18 பேரில் ஒருவன்.
கேகே நகர் போய் அம்முவிடம் சொல்லத் தோன்றியது. தைரியம் வரவில்லை.
புரொபசர் ஒருவர்… ரங்கம் கோயிலுக்கு அடிக்கடி வருபவர். என் மீதிருந்த பிரியத்தில் ஒரு கம்பெனியில் சேர்த்துவிட்டார்.
முதல் மாதச் சம்பளத்தில் ஒரு நோட்டைத் தனியே எடுத்துப் பத்திரப்படுத்தினேன்.
“பெருமாளுக்கு எடுத்து வச்சியாடா?”
அம்மா கேட்டபோது சந்தோஷமாய்த் தலையாட்டினேன்.
நேரில் பார்க்கும்போது தர வேண்டும்.
“ப்ளீஸ்... என் ஆசை. வேண்டாம்னு சொல்லிராதே.”
கண்ணில் கெஞ்சலை வரவழைத்துக்கொண்டு எந்த மாடுலேஷனில் அவளிடம் பேசப்போகிறேன் என்று அடிக்கடி ஒத்திகை பார்த்துக்கொண்டேன்.
முன்பு போல் தீர்த்தக்குடத்துக்குப் போக முடிவதில்லை. ஞாயிறு ஓய்வெடுக்கச் சொல்லி மிரட்டியது. கேகே நகர் பஸ்ஸில் போய்விட்டு அதே பஸ்ஸில் திரும்பினேன் துணிச்சல் வராமல்.
“என்னடா உன்னை பஸ்ல பார்த்தானாம் நம்ம நச்சு. எங்கே போனே? கூப்பிடக் கூப்பிட கவனிக்கலியாமே.”
“அவன் உளர்றான்மா. என்னை மாதிரி யாரையோ பார்த்துட்டு…”
ஒரு பெண்ணின் மீதான நேசம் ஒரு ஆணை எப்போதும் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கப்பட்ட காதல் வாழ்க்கைப் பாதையைச் செப்பனிட்டுத் தந்துவிடுகிறது. விடை தெரியா அன்பு காற்றில் நெகிழிபோல் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே.
அம்மாவிடம் சொன்னால் என்ன! தனியே தவிப்பதை விட ஏதேனும் ஒரு வழி கிடைக்குமே.
அதிரசத்தைப் பொரித்து எடுத்துக்கொண்டிருந்தவள் முன் போய் அமர்ந்தேன்.
வேலைக்குப் போகிற பையனுக்கு வாய்க்கு ருசியாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆதங்க அம்மா.
“சொல்லுடா” என்றாள் உடனே.
கண்ணுக்குப் புலனாகாத சரஸ்வதி நதியின் பெயர் கொண்டவளாச்சே. பெயர்ப் பொருத்தம் கனகச்சிதம்.
“எனக்கு அம்முவைப் பிடிச்சிருக்கும்மா!”
எடுத்தவுடன் அஸ்திரம்தான் என் பழக்கமும்.
அடுப்பை விட்டு அம்மா திரும்பவில்லை. சரியான பதத்தில் பொரிந்ததை எடுத்துத் தட்டில் போட்டாள். விட்டால் கருகிவிடும். முன்னாடி எடுத்தால் வெந்திருக்காது.
“உங்கப்பாதான் எனக்கு நகை போட்டுக் கல்யாணம் பண்ணிண்டு வந்தார் அப்போ. இன்னி வரைக்கும் எங்க வீட்டு மனுஷா போக்குவரத்து இல்ல. நானும் ஒண்ணும் குறைஞ்சுபோகலடா. கரண்டி பிடிக்கிறவன்னு அலட்சியம். நானும் கூட நிப்பேன் அடுப்புல. உன்னையும் வளர்த்தாச்சு.”
என்ன சொல்ல வருகிறாள்..
“நீ சொல்லாட்டியும் எனக்கே தெரியும். அவளால நீ முன்னுக்கு வருவது எனக்கும் சந்தோஷம்தான். அம்முகிட்ட பேசு. உன் ஆசையைச் சொல்லு. என்ன பதில் வந்தாலும் ஏத்துக்கோ. ஏன்னா…”
அம்மாவும் அம்முவைப் போலவே இந்த நிமிஷம் என் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.
“எனக்கும் நீ வேணும்டா.”
கே.கே. நகர் பஸ்ஸில் இந்த முறை ஏறி அமர்ந்தபோது யார் கவனித்தாலும் கவலை இல்லை என்கிற மனநிலைதான் எனக்கு.