சர்க்கரைநோய் கர்ப்பிணியின் கவனத்துக்கு!


அகிலா இளம் மனைவி. என் நண்பரின் மருமகள். சிறு வயதிலிருந்தே குண்டு உடம்பு. சமீபத்தில் அவள் கர்ப்பிணி ஆனாள். தற்போது மகப்பேறு மருத்துவரின் கவனிப்பில் இருக்கிறாள். ஐந்து மாதங்கள் வரை ‘மசக்கை வாந்தி’ உள்ளிட்ட எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்ததால், கண்டதைத் தின்று, தாய்மையின் கனவுகளில் சந்தோஷமாக இருந்தாள். ஆறாம் மாதம் ஆரம்பித்தது அந்தப் பிரச்சினை. அவளுக்கு ரத்தச் சர்க்கரை திடீரென்று கூடிவிட்டது. மருத்துவர், “உங்களுக்குச் சர்க்கரைநோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இனிமேல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்”

என்று எச்சரித்ததும் பயந்துபோய் என்னிடம் வந்தாள்.

“அங்கிள், என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு எப்படிச் சர்க்கரைநோய் வந்திருக்கும்? இதுவரை எந்த ஒரு அறிகுறியும் இல்லையே! அப்பா, அம்மாவுக்கும் சர்க்கரைநோய் இல்லை! லேப் ரிப்போர்ட்டில்தான் எனக்குச் சந்தேகம் உள்ளது” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தவள், என்னிடம் மறுபடியும் ரத்தப் பரிசோதனை செய்துகொண்டாள். அவளுக்கு ரத்தச் சர்க்கரை அதிகமாக இருப்பது உறுதியானது; அதனால், அச்சம் அதிகமாகியது. பதற்றத்துடன் என்னைப் பார்த்தாள்.

“பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் இப்படிச் சர்க்கரைநோய் வருவதுண்டு. இதுவும் ஒரு வகையில் ‘ப்ரிடயாபிடிஸ்’ எனப்படும் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலைதான். உனக்கு இது வந்த காரணம் உன் குண்டு உடம்பும் ‘குண்டோதர’ச் சாப்பாடும்தான். உணவைக் கட்டுப்படுத்தினால் இதைச் சரிசெய்துவிடலாம்” என்று அவளுக்குத் தைரியம் சொன்னேன்.

x