பொங்கலோ... பொங்கல்- எஸ்.நீலவண்ணன்


குவாட்டரை வாங்கிக்கொண்டு, 10 ரூபாய்க்கு ஒரு கிளாஸும், வாட்டர் பக்கெட்டும் வாங்கி ஓரம் கட்டி, மூடியைத் திருகி 90 மிலி சரக்கை கிளாஸில் ஊற்றி, வாட்டர் பாக்கெட்டை பல்லால் கடித்து பாதி தண்ணீரை சரக்கில் ஊற்றி சுண்டலுக்காக சுற்றும் முற்றும் பார்த்து, சற்றுத் தள்ளி அனாதையாக மந்தார இலையில் கிடந்த சுண்டலை அள்ளி வலது கையில் வைத்துக்கொண்டு கப்பென சரக்கை வாய்க்குள் கவிழ்த்து விழுங்கி மூச்சு வாங்கினேன்.( நாமும் மூச்சு வாங்குவோம், சற்றே பெரிய வாக்கியம்.)

சற்று நேரத்தில் வெளியே வந்து கையேந்திபவனில் 4 இட்லியும் ஒரு தோசையும் சாப்பிட்டு 30 ரூபாய் கொடுத்துவிட்டு , சொந்த ஊருக்குச் செல்லும் பஸ்ஸில் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி, வாகான இடம்பிடித்து கால்களுக்கிடையில் கட்டைப் பையை வைத்தபடி நின்று, அருகில் இருந்தவரிடம் மணி கேட்டேன். இப்பவே மணி 10. ஊர் போய்ச் சேர எப்படியும் அதிகாலை 3 மணியாகுமா..? ஆயாசமாய் கம்பியில் சாய்ந்தேன். மனைவி பார்வதியும் மகள் இந்திராவும் இந்நேரம் தூங்கி இருப்பார்களா..? ஹும், தாம்பரம் தாண்டி கிஷ்கிந்தா அருகே ஒரு கல் குவாரியில் கல் உடைக்கப்பட்டு சிப்ஸ்களை லாரியில் ஏற்றும் லோடு மேனாக வேலைக்கு வந்து இதோ 6 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.

சனிக்கிழமை வாரச் சம்பளம் வாங்கிக்கொண்டு 2 மாதத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போய் வருவேன். பார்வதி கறவை மாடுகளையும் நாலஞ்சு ஆடுகளையும் வைத்துக்கொண்டு கிராமத்தில் இருகிறாள். மகள் இந்திரா அதே ஊர் பள்ளியில் ஏழாவது படிக்கிறாள். மழை பொய்த்துப் போனால் விவசாயம் இல்லாமல் விவசாய கூலிகளை நினைத்துப் பார்க்க யார் இருக்கிறார்கள். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும்” என்பவர்களால் நன்றாகப் பேசமட்டுமே முடிகிறது.

நின்றபடியே தூங்கிய நான் சட்டென விழித்தபோது மோட்டலில் பஸ் நின்றிருந்தது. நாக்கு வறண்டு கிடந்ததால் கீழே இறங்கி, சிண்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் குடித்தேன். மீண்டும் பஸ்ஸில் ஏறி, நின்றபடி தூங்க ஆரம்பித்தேன். பஸ் நிற்காத எங்கள் ஊரில் நிறுத்தச் சொல்லி கண்டக்டரிடம் கெஞ்சிக் கெஞ்சி ஒரு வழியாக இறங்கியபோது அதிகாலை 3 மணி.

x