சர்க்கரைநோய் வரும் ஆனால் வராது..! எப்படி?


டாக்டர் கு. கணேசன்

‘இது என்ன அர்த்தநாரீஸ்வரத் தலைப்பு’ என்று யோசிக்கிறீர்களா? ‘தலைப்பு சரிதான்’ என்று சாட்சி சொல்ல இங்கே இருவர் இருக்கிறார்கள். ஒருவர் சுந்தரமூர்த்தி; பஞ்சுவியாபாரி. ஒருமுறை காய்ச்சலுக்காக என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். ரத்தப் பரிசோதனை அவருக்கு ‘மலேரியா’ என்றது; அப்போது ரத்தத்தில் சர்க்கரையும் சற்றே அதிகமாக இருந்தது. அதனால், “உங்களுக்குச் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கிறது. உணவைக் குறைத்து உடலைக் குறையுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஃபிட்னெஸ் முக்கியம்” என எச்சரித்தேன். அதற்கு அவர் உடன்படவில்லை. மலேரியா சரியான பிறகு மறு பரிசோதனைக்கும் அவர் வரவில்லை.

பல வருடங்கள் கழித்து ஒரு ரயில் பயணத்தில் அவரைச் சந்தித்தேன். மனிதர் எலும்பும் தோலுமாக இருந்தார். விசாரித்தேன். “மன்னிக்கணும் டாக்டர்! அன்றைக்கு உங்கள் ஆலோசனையை நான் ஏற்க மறுத்தேன். நீங்கள் எச்சரித்ததுபோல் எனக்குச் சர்க்கரைநோய் வந்துவிட்டது. சென்னையில் சிகிச்சை எடுத்தேன்; வியாபார மும்முரத்தில் மாத்திரைகளை ஒழுங்காக விழுங்கவில்லை. என் சர்க்கரை அளவு கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இன்சுலின் போட வேண்டியது கட்டாயமாகிவிட்டது. அதையும் நான் சரியாகப் போட்டுக்கொள்ளவில்லை. அதன் விளைவை நன்றாக அனுபவித்தேன். முதலில் கண்பார்வையில் பாதியை இழந்தேன். அதன் பிறகு வலது கால்பாதம் இழந்தேன். இப்போது மாரடைப்பு. பைபாஸ் ஆபரேஷனுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றார் மிகுந்த வருத்தத்துடன்.

அடுத்தவர், அரங்கநாதன். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் மேலதிகாரி. ஒருமுறை ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்தபோது, அவருக்கும் ரத்தச் சர்க்கரை கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது; சர்க்கரைநோய் வராமல் தடுக்க வழக்கமான ஆலோசனைகளைச் சொன்னேன். அளவான உணவின் அவசியம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினேன். அடுத்த நாளிலிருந்து அவர் சிரமேற்கொண்டு என் வழி நடந்தார். ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆரம்பத்தில் நான் சொன்னதை இன்றைக்கும் அவர் விட்டுவிடவில்லை; சென்ற மாதம்கூடப் பரிசோதனைக்கு வந்திருந்தார். இன்றுவரை அவருக்குச் சர்க்கரைநோய் இல்லை.

x