நிழற்சாலை


கண்ணாடி மனம்
மறுபுறம் இருக்கும்
பல்லியைக் கொத்துவதாய் நினைத்து
கண்ணாடியைக் கொத்துகிறது 
பறவை.
பல்லியின் பொருட்டு
கண்ணாடி உடைந்துவிடக் கூடாது
என்று வேண்டிக்கொள்கிற நான்
பறவையின் பொருட்டு
வேண்டிக்கொள்கிறேன்
அதன் அலகு
உடைந்துவிடக் கூடாதென்றும்.
நடுவில் கண்ணாடியாய் இருப்பது
என் மனம் போலவே
இருக்கிறது இப்போது!
- கீர்த்தி

சொப்னபுரிக்கு 120 கி.மீ
பெரும் இடைவெளி அது
அதில்தான் என் அத்தனை கனவுகளும்.
நீந்தி நிமிர வளைந்து நெளியும்
ஆழியாரும் சோலையாரும்
பரம்பிக்குளம் வரை
செல்லும் அரூப ஆலாபனைகள்.
நினைத்ததும் வளைக்க முடியாத
கொண்டை ஊசி வளைவுகளுக்கு அப்பால்
இருக்கும் சொப்பனபுரி அது.
கோவைக்கும் வால்பாறைக்குமிடையே
120 கி.மீ தான் என யாராவது கூறினால்
அவர்களுக்குத் திரும்ப கூறுகிறேன்
120 கிலோ மீட்டர்களும்
28 வருடங்களும்!
- கவிஜி


கிளைநதிகள்
ரயில் வண்டியின் தடத்துக்கு
இணையாகச் செல்லும்
பேருந்தின் உள்ளிருந்து
குரல் கொடுக்கிறாள் ஒரு சிறுமி.
ரயில் பெட்டியிலிருந்தும்
ஒரு சிறுவன் கையசைக்க
ஒரே நேர்கோட்டில்
இருவரும் பயணிக்கின்றனர்.
நான் முன்னே நீ முன்னே
என இருவரும் குரல் கொடுக்க
போட்டிபோட்டு விரையும்
ரயில்வண்டியும் பேருந்தும்
ஒரு ஆலமரத்தை சாட்சியாக வைத்து 
பிரிகின்றன
ஒரு நதியின் இரு கிளைநதிகளாய்.
- அருணாச்சல சிவா


விடியலின் ஒளி
அந்தச் சாலையை
அவ்வளவு இலகுவாய்க்
கடக்கமுடியவில்லை.
கபடமற்று சிரிக்கும் குழந்தையை
பார்த்தபோது
அதன் கையிலிருந்த
உடைந்த பொம்மையாய்
மாறியிருந்தது இதயம்.
வெற்றுக் குச்சியை
வாயில்வைத்து
சுவைத்த இதழ்களுக்கு
ரோஜாவின் நிறம்
நிலவை துணைக்கழைத்து
கதைபேசும் கண்களில்
விடியலின் ஒளி
நடைபாதை ஓரத்தில்
அழுக்கேறிய உடையணிந்த தாயின்
அரவணைப்பில் கிடக்கும் மகள்
நாளை தலைமகளாய் வரலாம்.
இப்பிந்திய இரவில்
விழித்துக்கொண்டே இருக்கும்
மாளிகை கண்கள் பெறவில்லை
விரித்துவைத்த வானத்தின்கீழ்
நிம்மதியான அந்த உறக்கத்தை.
- திராவிட மணி

x