போராட்டங்கள், அரசியல் களத்தில் திடீர் மாற்றங்கள் என்று இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழ்நாடு தன்னைக் கவனிக்க வைத்த ஆண்டு இது. சாதிய-நிலவுடைமைச் சமூகத்தால் கீழ்வெண்மணியில் 44 பேர் தீவைத்துப் படுகொலை செய்யப்பட்டதன் 50 வது ஆண்டும் இது. அங்கிருந்து எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் அல்லது வரவில்லை என்பதை இந்த ஆண்டைச் சற்றுத் திரும்பிப் பார்க்கும்போது நாம் அறிந்துகொள்வோம்!
கமல் – ரஜினி நடிக்கும்…
ட்விட்டர் அரசியலிலிருந்து நேரடி அரசியலில் கமல் இறங்கிய ஆண்டு இது. பிப்ரவரி மாதம் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். ‘மையமாக’ பேசுவதாலேயே நிறைய மீம்களுக்கும் இலக்காகிக்கொண்டிருக்கிறார். ரஜினியும் கட்சி தொடங்குவதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்புகளின்போது நிதானமிழந்து பேசி மீம்களின் கருவாகிக்கொண்டிருக்கிறார்.