மார்கழி மாசத்து ‘பேட்ட’யில்..!


கே.கே.மகேஷ்

புரட்டாசி மாசம் பூராப்பேரும் பெருமாள் பக்தர்களாவும், கார்த்திகை மாசம் அய்யப்ப பக்தராவும் மாறுற மாதிரிதான் இதுவும். மார்கழி (ஜனவரி) மாசம் வீட்டுக்கொரு எழுத்தாளர் கௌம்பிருவாங்க. இந்த ஒரு வருஷத்துல ஃபேஸ்புக்ல போட்ட போஸ்ட்டை எல்லாம் தொகுத்தாவது ஒரு பொஸ்தகம் போட்டுறனும்னு ஒரு கும்பல் கலைவெறியோட திரியும். போதாக்குறைக்கு, சினிமா மாதிரியே ஃபர்ஸ்ட் லுக், டீசர், ‘புத்தகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்’ என்கிற ரசிக(?) கண்மணிகளின் பதிவுகள் என்று சமூக வலைதளமே அல்லோல கல்லோலப்படும்.

அந்தக் காய்ச்சல் கிராமத்துக்கும் பரவிடுச்சி போல. ஊருக்குப் போயிருந்தப்ப, “உன்கிட்ட காட்டணும்னு ரொம்ப நாளா ஒரு ரகசியத்தை வெச்சிருக்கேன்”னு சொன்னாரு மாமா ஒருத்தரு. “என்னவா இருக்கும்? சின்ன வயசுல எடுத்த போட்டோ கீட்டோவ வெச்சிருப்பாரோ”ன்னு அவரோட நூலாம் படை அடைஞ்ச குடோனுக்கு ஆர்வமா போனேன். ‘96’ படத்து விஜய் சேதுபதி மாதிரி பழைய ட்ரெங்குப் பெட்டியைத் திறந்து ஒரு டைரிய எடுத்தாரு. பூராம் மொக்கை கவிதை. ஒவ்வொண்ணையும் சத்தமா வாசிக்கச் சொன்னாரு. நடுவுல நடுவுல, அதன் பொழிப்புரை, விளக்கவுரை, கவிதை எழுதுன சிட்டிவேஷன், அதுக்கு அந்தப் பொண்ணு காட்டிய ரியாக்ஷன் எல்லாத்தையும் ஓரங்க நாடகமாவே நட(டி)த்திக் காட்டுனாரு. அறுவை தாங்க முடியல. புழுக்கம், மூக்கு நமைச்சல் வேற. ஆனாலும் விடல. அந்தக் கொடுமையைக் கூடத் தாங்கிட்டேன். ஆனா, கடைசியில ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க... “மருமவியளே, நுப்பது வருஷமா பாதுகாத்து வெச்சிருக்க பொக்கிஷம் இது. பொஸ்தகமா போடப் போறேன். நீங்க கண்டா காப்பியடிச்சிறாதீங்க!”ன்னு. கொலைவெறியாகிட்டேன்.

மதுரை எல்லீஸ்நகர்ல தங்கையான்னு ஒரு பெரியவரு தும்முனாலே கிழிஞ்சி போற மாதிரி ஒரு பாழாப்போன நோட்டக் காட்டி, “இதெல்லாம் நான் எம்ஜிஆரை மனசுல வெச்சி எழுதுனது. பொஸ்தகமா போடப் போறேன்”ன்னு சொன்னாரு. ஒவ்வொரு பக்கத்துலேயேயும் ‘கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்: எல்லீஸ் கே.தங்கன்’ன்னு ரப்பர் ஸ்டாம்பு குத்தியிருந்தது மட்டும்தான் ரசிக்கிற மாதிரி இருந்துச்சி. அந்த நோட்டை வாசிச்சி ஆஹா, ஓஹோன்னு பாராட்டணுங்கிறது அவரோட எதிர்பார்ப்பு போல. ஒவ்வொரு பக்கத்தையா புரட்டி, ‘எப்டி?’ன்னு பெருமையாக என்னைப் பார்ப்பார். நான் சூப்பர்னு புருவத்துலேயே பொய் சொல்வேன். ஒரு வழியா நோட்டு முடிஞ்சுது  தப்பிச்சோம்னு பாத்தா, ஒரு புதுநோட்டை திறந்தாரு. தன்னோட மனசையும்தான். “நானும் பல நடிகைங்கள பார்த்திருக்கேன் தம்பி. குழந்தையின் முகமும் குமரியின் உடலும் கொண்ட ஒரே நடிகை நமீதாதான். அவங்கள இந்த தமிழ் சினிமா சரியா பயன்படுத்திக்கிடலையேங்கிறது என்னோட பெரிய ஆதங்கம். அதனால அவங்களுக்குன்னே இந்தக் கதையை எழுதுனேன். படிங்க” என்றார். கதைக்குப் பொருத்தமாக ஆங்காங்கே நமீதா ஸ்டில்களை ஒட்டியிருந்தார்.

x