சேத்தூரில் தோப்புகளுக்குள் புகுந்த காட்டு யானைகள்: மா, பலா, வாழை மரங்கள் சேதம்


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்தூரில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டம் மா, பலா, தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஆதிபுத்திர அய்யனார் கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா, தென்னை, வாழை, பலா மரங்கள் உள்ளன. தற்போது மா, பலா அறுவடை சீசன் என்பதால் விவசாயிகள் தோட்டத்தில் தங்கி இருந்து காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (வெள்ளிகிழமை) அதிகாலையில் இப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் கூட்டம் அங்கிருந்த மா, தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இப்பகுதியில் காட்டுயானைகள் பிரவேசிப்பது இதுதான் முதல் முறை என்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி விவசாயிகள், “மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் தோட்டங்கள் உள்ளது. இப்பகுதியில் முதன் முறையாக காட்டுயானைகள் தோட்டத்திற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் யானைகளுக்குப் பயந்து மாங்காய்களை முன்னதாகவே அறுவடை செய்து வருகிறோம்.

வனவிலங்குகள் வெளியே வருவதை தடுக்க மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட அகழிகள் பராமரிப்பின்றி மூடப்பட்டு விட்டதால் வன விலங்குகள் எளிதாக வனப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றன.

மேலும், தமிழக வனத்துறை சார்பில் இம்மாதம் வெளியிட்ட யானைகள் வழித்தடங்கள் குறித்தான வரைவு அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 42 யானை வழித்தடங்களில் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அய்யனார் கோயில் முதல் தேவதானம் தேவியாறு வரையும் யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக யானைகள் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்துள்ளன. யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.