முதுகுவலிக்குத் தீர்வு எது?


டாக்டர் கு. கணேசன்

முதுகுவலிக்கு எத்தனையோ காரணங்கள். பல காரணங்கள் சீக்கிரத்தில் காணாமல் போய்விடும். சில காரணங்கள் மடியிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தைபோல் நம்மை விட்டு விலகுவதற்கு அடம் பிடிக்கும். அந்த மாதிரி காரணங்களில் மிகவும் முக்கியமானவை முதுகெலும்புச் சவ்வு விலகுவதும் (Disc prolapse) முதுகெலும்பு மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவதும்.

இந்தக் காரணங்களால் முதுகெலும்பை ஒட்டி தண்டுவடம் செல்லும் துவாரம் சிறுத்துவிடுகிறது. இதனால் அங்குள்ள நரம்பு அழுத்தப்படுகிறது. அதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து, நரம்பு இயங்க வழி இல்லாமல் வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படுகிறது. இதனால்தான் முதுகிலிருந்து காலுக்குப் பரவும் வலியை ‘சியாட்டிகா’ (Sciatica) என்கிறோம்.

ஆரம்பத்தில் இந்த வலி அவ்வப்போது கீழ்முதுகில் மட்டும் ஏற்படும். பெரும்பாலானோர் இதை ‘வாய்வு வலி’ எனத் தீர்மானித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். திடீரென்று வலி கடுமையாகிப் பின்புறத் தொடைக்கோ காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல் ‘சுரீர்’ என்று பாயும். படுத்து உறங்கும்போது வலி குறைந்து, நடக்கும்போது அதிகமாகும். நாளாக ஆக காலில் மரத்துப்போன உணர்வும் ஏற்படும். இதைக் காலத்தோடு கவனிக்காவிட்டால் கால் மெலிந்துவிடும்.

x