‘தூங்காபி’ பூங்காவில் உட்கார்ந்திருந்தார் சபாபதி. நாலைந்து மரங்கள், பச்சை நிறப் புல்வெளி, கழிப்பறை, பெஞ்சுகள் அடங்கிய சிறிய பூங்கா. அந்தப் பூங்காவுக்குப் பக்கத்திலேயே ‘தூங்காபி’ கடைத்தெரு. மொத்தமாய் எழுபது கடைகள் இருக்கும். ‘தூங்காபி’ என்ற பெயர் ‘ஒரு மாதிரியாக’ இருப்பதாக மகன் சொல்லிவிட்டு யோசித்தான்.
அப்போது சபாபதி அவனிடம், “தூங்காபி என்ற பெயர் அபோர்ஜின் (கருப்பின ஆதி குடிமக்கள்) சொல். தூங்காபி என்றால் அவர்கள் மொழியில் ‘நீர்களின் சந்திப்பு’ என்று அர்த்தம். ஒரு காலத்தில் இங்கே பல நீரோடைகள் இருந்து சந்தித்திருக்கலாம். இன்று நீரோடையையும் காணோம், அபோர்ஜின்களையும் காணோம். பெயரில் என்ன இருக்கிறது? வெள்ளைக்காரர்களும் இங்கே இருக்கிறார்களே?” என்று சொன்னார். அதை மறுக்காத மகன் வீடு வாங்கிவிட்டான்.
பூங்காவுக்கு எதிர்ப்பக்கம் ரயில்வே ஸ்டேஷன். வீட்டிலிருந்து 10 நிமிட நடையில் ரயில்வே ஸ்டேஷன். மகனும் மருமகளும் வேலைக்குப் போய்விட்டார்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய்விட்டன. மாலை 3 மணிவரை வீட்டில் அவருக்குத் தனி ஆட்சி. மனைவி இருக்கும் வரை வீட்டில் இருந்தார். 2 வருடங்களுக்கு முன்பு அவளின் மறைவினால் தனிமனிதனாகி, காலையில் பூங்காவுக்கு வருவது வழக்கமாகியது.
பூங்காவில் நான்கு பெஞ்சுகள் இருந்தன. மூன்று பெஞ்சுகளில் தினமும் இந்தி பேசுபவர்கள் கூடிப் பேசுவார்கள். சபாபதியின் பெஞ்சில் அவர் மட்டுமே. அவரின் பெஞ்சுக்குப் பக்கத்தில் ஒரு மரம். அதில் ஒரு பறவை சிறகடிக்கிற சத்தம். நிமிர்ந்து பார்த்தார். கருப்பு நிற உடலில் திட்டுத் திட்டாய் வெள்ளை நிறம் படிந்த, பார்வைக்குக் காகம் போன்ற பறவை. அதன் பெயர் ‘மக்பி’.
இங்கு குடியேறிய இந்தியர்கள், இலங்கையர்கள் ‘காக்கை' என்றே சொல்வார்கள். ஆனால், அது காக்கை போல் கரையாது. அமாவாசையன்று விரதச் சோற்றை ஒரு கோப்பையில் வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு அய்யர் ‘கா... கா... கா... கா..'. எனக் கூப்பிடுவார் . ஆனால், எந்தக் காக்கையும் வராது. கடைசியில் மைனாக்கள் சாப்பிடும். அவற்றை இங்கு ‘இந்தியன் மைனாக்கள்’ என்றே வெள்ளைக்காரர்கள் அழைக்கின்றனர்.
மற்ற பெஞ்சுகளில் இருந்தவர்கள் இந்தியில் உரத்துப் பேசுகிற சத்தம் கேட்டது. அவரருகே எவரும் வரவில்லை. அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் எவரும் வர மாட்டார்கள். அவருக்கு இந்தி தெரியாது. அவர்களுக்குத் தமிழ் தெரியாது. இரு தரப்பும் சந்தித்தால் ஒரு மின்னல் வேகப் புன்னகை, ‘ஹலோ’ என்ற சொல் மட்டுமே பரிமாறிக்கொள்வார்கள்.