அலறி ஓடும் ஆஸ்துமா!


டாக்டர் கு. கணேசன்

‘சுத்தம் சுகம் தரும்’. இதுதான் ஆஸ்துமா உள்ளவர்களுக்குத் தாரக மந்திரம். வீடு, அலுவலகம், தெரு, சூழல் எங்கும் எதிலும் சுத்தம் அவசியம். இவர்களுக்குத் தூசும் மாசும் ஆயுளுக்கும் ஆகாது. வீட்டில்/அலுவலகத்தில் தேவையில்லாமல் பொருட்களைச் சேரவிடக் கூடாது. உதாரணமாக, சுவர்களில் படங்களைத் தொங்கப்போட்டால் ஒட்டடை சேரும். ஒட்டடை இவர்களுக்குப் பரம விரோதி.

படுக்கை விரிப்புகளும் தலையணை உறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உண்ணிகளுக்கு அங்கே இடமில்லாமல் போகும். ஆஸ்துமாக்காரர்கள் கம்பளியைப் பயன்படுத்தக் கூடாது; சுழல்விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. ‘சில்’லென்ற காற்று நேரடியாக அறைக்குள் நுழையக் கூடாது.

வாசனைத் திரவியங்கள், வீட்டு உபயோகப் பொருட்களின் ரசாயனங்கள், ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவிரட்டி இப்படி எதையும் பயன்படுத்தக் கூடாது. ஒட்டடை எடுப்பது, வெள்ளை அடிப்பது, வர்ணம் பூசுவது போன்றவற்றை ஆஸ்துமாக்காரர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது.
ஆஸ்துமாக்காரர்கள் வீட்டில் பூச்செடிகளையும் செல்லப் பிராணிகளையும் வளர்ப்பது மண்ணுளிப் பாம்பை மடியில் கட்டிக்கொள்வதற்குச் சமம். அதுபோல் தூசு உள்ள இடங்களில் வேலை செய்வதும், மாசு மிகுந்த இடங்களுக்குச் செல்வதும் தேன்கூடு எனத் தெரிந்தே அதன்மேல் கை வைப்பதற்கு ஒப்பாகும். தவிர்க்க முடியாதவர்கள் அந்த இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். பனிக்காலத்தில் ஸ்கார்ஃப் கட்டிக்கொள்ள வேண்டும்.

x