தனியொருவனுக்கு வாத்து முட்டை இல்லையேல்..!


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in


சிஎம் பதவிகூட திடுதொப்புனு கிடைச்சுடுற இந்த நாட்ல, சிங்கராஜ்க்கு ஒரு வாத்து முட்டை கெடைக்கலங்க. அதுவும் நேத்து, இன்னைக்கு இல்ல... 30 வருஷமா! தன்னோட வாழ்நாள் லட்சியங்கள்ல முக்கியமான ஒண்ணு வாத்து முட்டை சாப்புடுறதுதான்னு சொல்ற அளவுக்கு கொலைவெறி ஆர்வம் அவனுக்கு. 

காரணம், அவன் கூட ரெண்டாப்பு படிச்ச அழகு. “ஏலே வாத்து முட்டை சாப்பிட்டா உடம்புக்குப் பெலன், அதுமட்டுமில்ல நீச்ச அடிக்காமலேயே தண்ணியில மிதக்கிற திறமையும் வந்திடும்”னு அள்ளிவிட்டான் அழகு. “மயில் இறகை பொஸ்தகத்துக்குள்ள வெச்சா குட்டி போடும், விழுந்த பல்லை வானத்துக்குக் காட்டுனா மறுபடியும் முளைக்காமப் போயிடும், 100 அடிக்கு மேல கிணறு தோண்டுனா பாதாள உலகத்துல இருந்து வால்முளைச்ச மனுசங்க வெளிய வந்துருவாங்க” என்பதுபோல தினம் ஒரு ‘செல்லூரார்’ செய்திகளைச் சொல்றவன் அழகு. அவனை நாசா விஞ்ஞானி மாதிரி நம்புன பைத்தியாரப் பய சிங்கராஜ்ங்கிறதுக்கு ஒரு உதாரணம் சொல்றேனே. 

சிங்கராஜ் வகுப்புல மணிகண்டன்னு ஒரு முரட்டுப் பய இருந்தான். ஒருதடவை அவன் சிங்கராஜை அடிக்க, கடைசியில அழகுதான் ஆறுதல் சொன்னான். “டேய், இப்ப என்ன மணிகண்டனை அடிக்கணும் அவ்வளவுதான? செய்யது பீடி குடி வீரம் வரும்”னான். “அதெப்படிடா?” என்று ஆச்சரியமா கேட்ட சிங்கராஜ்கிட்ட, “நம்மூர் அம்மன் கோயில் கொடைக்கு ‘மனிதன்’ படம் போட்டாங்களே. அதுல ரஜினி ஒரு மொட்டை தடியனை எப்படி தாய்ப்பால் கக்க கக்க அடிப்பார்னு பாத்தியா? அவருக்கு எப்படி அவ்வளவு வீரம் வந்துச்சி? பீடி குடிக்கிறதாலதான்டா” என்றான்.

(இந்த இடத்தில் பொதுநலன் கருதி ஒரு அறிவிப்பு: புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும். smoking causes cancer; smoking kills)

அடுத்த நாளே செய்யது பீடி குடிச்சிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போன சிங்கராஜ், கையில வெச்சிருந்த கல் சிலேட்டால ஓங்கி ஒரு போடு போட்டான் மணிகண்டன் மண்டைல. 16 வயதினிலே படத்துல பரட்டைய சப்பாணி அறைஞ்சதும் அகில உலகமும் உறைஞ்சு போகுமே, அதேமாதிரி எல்லாமே உறைஞ்சு போனமாதிரியும் தோணுச்சி சிங்கராஜ்க்கு. அப்புறம் நடந்ததே வேற. அடுத்த நொடி மணிகண்டன் அடிச்ச அடியில, சிங்கராஜ் டவுசரே நனைஞ்சி போச்சு. “பீடி குடிச்சா வீரம் வரும்னு சொன்ன?”ன்னு அவன் அழகுட்ட கேட்க, “ஸாரிடா தப்பாச் சொல்லிட்டேன். ‘மனிதன்’ படத்துல ரஜினி குடிச்சது பீடி கெடையாது. சிகரெட்டு. அதைக்குடிச்சுப் பாரேன்”ன்னான். இருந்தும், வாத்து முட்டை விஷயத்துல மட்டும் சிங்கராஜ் பட்டும் திருந்தாம, ஒரு ‘வாத்தா’வே இருந்துட்டான். 

அந்த லட்சியத்தை அவன் மறந்தாலும், சம்பந்தமில்லாத ஆளுங்க எல்லாம் கூட அதை ஞாவகப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. ரெண்டாப்பு வாத்தியார், பொன் முட்டையிடும் வாத்து கதையைச் சொன்னாரு. நடிகர் பாக்கியராஜ், ‘அந்த ஏழு நாட்கள்’ல ’நான் வாத்து நான் வாத்து’ன்னு பாடி ஞாபகப்படுத்துனாரு. ஆஸ்டல்ல அவன் கூடப் படிச்ச ஒரு பையன் கரூர்காரன். “எங்கவூர்ல வாத்து முட்டை ரொம்ப  ஃபேமஸ். கரூர், பரமத்திவேலூர், திருசெங்கோடு ஏரியாவுல எல்லாக் கடையிலேயும் புரோட்டாவுக்கு சைடிஸ்ஸே வாத்துக்கறிதான்”னு சொன்னான். சிவகாசி நண்பன் ஒருத்தன், “எங்கவூர் ஆப்செட் பிரின்டர்ல பூராம், பிரின்ட் பண்ற பிளேட்டை ரீ யூஸ் பண்றதுக்கு வாத்து முட்டையோட வெள்ளைக்கருவைத்தான் சேர்ப்பாங்க. மஞ்சக்கருவை நாய்க்கு ஊத்துவோம், இல்லாட்டி சாக்கடையில ஊத்துவோம்”னு பெருமை பீத்துனான். 

“தனியொருவனுக்கு வாத்து முட்டை இல்லையேல்...”னு உலகத்தை அழிக்க கிளம்புன நேரத்துல, சிங்கராஜுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. ‘அந்தப் பொண்ணு ஊருக்கு அறுவடை நேரத்துல வாத்து கிடை போடுறவங்க வருவாங்களாம்பா’ன்னு யாரோ சொன்னதை நம்பி ரொம்ப ஆவலா இருந்திருக்கான். ஆனா, அவனோட ஆக்கக்கெட்ட நேரமோ என்னமோ நாலஞ்சு வருஷமா வாத்துக்கிடை போடுறவங்க வரவேயில்ல.

திடீர்னு ஒருநாள் மாமியார்கிட்ட இருந்து போன். “மருமகனே... நம்மூர்க்கு விழுப்புரத்துக்காரங்க வாத்து மேய்க்க வந்திருக்காங்க”ன்னு சொன்னதும் இவனுக்கு தலைகால் புரியல. வழக்கமா பொண்டாட்டி ஊருக்கு போகுறதுக்கு ஏக கிராக்கி பண்ற அவன், இந்த வாட்டி வாங்கன்னு கூப்பிடாமலேயே வாலன்டியரா வண்டி ஏறுனான். போன கையோட பேன்ட் சட்டைய கூட மாத்தாம, வயக்காடு பூராம் சுத்தி வாத்து மேய்க்கிறவங்கள கண்டுபிடிச்சான். தயங்கித் தயங்கி அவன் முட்டை வெலை விசாரிக்க, “ஒரு முட்டை 5 ரூபா”ன்னு அவங்க சொல்ல, இவனால நம்பவே முடியல. “நிஜமாவா சொல்றீங்க?”ன்னு ஒரு தட்டு முட்டை (30 எண்ணம்) வாங்கிட்டுப் போயிட்டான்.

என்னவோ டைனோசர் முட்டையைக் கொண்டு வந்து குடுத்த மாதிரி, “அய்யய்யோ இதை சமைக்கத் தெரியாதே”ன்னா சிங்கராஜோட சீமப் பொண்டாட்டி. “வழக்கமா யூடியூப் போட்டுதானே சமைப்ப, அதுல பாத்துச் செய்”ன்னான் அவன். வந்தது பூராம் மலையாள வீடியோ. “ரெண்டு தாரா முட்ட எடுத்திருக்கின்றது... மெயினாயிட்டு சேர்க்க வேண்டியது பெருஞ்சீரகப்பொடி... மூணோ, நாளோ உள்ளி சிறிதாய்ட்டு அரிஞ்சது... அதுபோலதன்ன, வெல்லம் சேத்து” என்று சேச்சி மலையாளத்தில் சொன்னதை தப்பும் தவறுமா புரிஞ்சுக்கிட்டு அந்தம்மா எப்படியோ சமைச்சுக் குடுத்துது.

ஒரே நாள்ல ஒரு டஜன் முட்டையத் தின்னுட்டு வயறு உப்புசமாகி, மாட்ட விழுங்குன மலப்பாம்பு மாதிரி மல்லாந்திட்டான் சிங்கராஜ். முட்டைச் செலவைவிட, ஆஸ்பத்திரி செலவு டாப் கியர்ல போயிருச்சு. கை மருந்து பாக்க வந்த கிழவி வேற, விஷயத்தை ஊரெல்லாம் தண்டோரா கொட்டிருச்சு. இவ்வளவு அசிங்கப்பட்டாலும், தன்னோட வாழ்நாள் லட்சியம் நிறைவேறுன சந்தோஷம் சிங்கராஜ்க்கு. அந்த மயக்கத்துலயும், “இப்படியே செத்துப்போனா பரவாயில்லை”ங்கிற பாட்டை முணுமுணுத்தான் முட்டை சிங்கராஜ்.

x