அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் நேற்றிரவு (மே 30) எரிந்து சேதமடைந்தன.
ஜெயங்கொண்டம் அடுத்த பிச்சனூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. அதில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்கள் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில், நேற்றிரவு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தோப்பு முழுவதும் சருகுகள் கிடந்ததால் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து விட்டு, ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க முயற்சித்துபோது, அருகே நெருங்க முடியாததால், தூரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்தும், மரங்களில் பச்சை கிளைகளை உடைத்து, அதனை தீயின் மீது அடித்தும் தீய கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், தீ வேறெங்கும் பரவாவண்ணம் தடுத்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வந்த யூகலிப்டஸ் மரங்கள் சேதமடைந்தன. மேலும், பிச்சனூர் கிராம பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.