பொழுதுபோக்குத் துறையின் பீஷ்மர்!


திரைபாரதி
readers@kamadenu.in

‘எல்லாம் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!’

என்ற தாயுமானவரின் வரிகளை தமிழரின் உள்ளத்தில் கல்வெட்டாய் பதித்த பத்திரிகை மேதை எஸ்.எஸ்.வாசன். அந்த வாசகத்துக்கு ஏற்ப, படவுலகில் அவர் செய்த புரட்சி, தமிழரை மட்டுமல்ல, மாநில, மொழி எல்லைகளைக் கடந்து இந்தியர்கள் அனைவரையும் இன்புறச் செய்தது. வாசன் எழுதியது ‘பிரம்மாண்ட’த் தின் புதுமைகளின் சினிமா வரலாறு.

காவேரி பாய்ந்தோடும் தஞ்சையின் கடை மடைப் பகுதியான திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர் வாசன். படிப்பதற்காகச் சென்னைக்கு வந்து, தமிழ் பத்திரிகை உலகையும் திரையுலகையும் மடைமாற்றிக் காட்டிய பொழுதுபோக்குத் துறையின் பீஷ்மர்! நினைவு தெரிவதற்கு முன்பே தந்தையை இழந்து, தாயிடமிருந்து தன்னம்பிக்கையைக் கற்றுக்கொண்டு சென்னைக்கு வந்த வாசன், தனது புத்திகூர்மை, துணிச்சல் ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு சுயமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். கல்லூரிப் படிப்பை உதறித் தள்ளிவிட்டு, அப்படி அவர் தேர்ந்தெடுத்தது எழுத்துத் துறை.

ஐடியாக்களின் மன்னர்

எதையும் கச்சிதமாக மனதில் பதியும் விதமாகச் செய்து காட்டவேண்டும் என்று தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கிய வாசன், தனது பெயரிலிருந்தே அதைத் தொடங்கிவிட்டார். டி.எஸ்.சீனிவாசன் என்ற தன் பெயரை எஸ்.எஸ்.வாசன் என ஈர்க்கும் விதமாக மாற்றிக்கொண்டார். ஐடியாக்கள்தான் மனிதர்களின் வாழ்க்கையை இயக்கவும் ஈர்க்கவும் செய்கின்றன என்பதை இளம் வயதிலேயே நன்கு அறிந்து வைத்திருந்த வாசன், இருபது வயதைத் தொடும்முன்பே சுமார் 36 சிறு புத்தகங்களை எழுதிக் குவித்தார்.

x