செல்லக்கிறுக்கனும் காரியக்கிறுக்கரும்..!


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.i

அந்த 50 வயசுக்கார மனுஷன் பச்சப்புள்ள மாதிரி அழுது அடம்பிடிச்சிக்கிட்டு இருந்தாரு. கொஞ்சம்விட்டா தரையில கிடந்து புரண்டாலும் புரள்வார் போலத் தெரிஞ்சுது. அவங்க அப்பா இறந்துட்டார். ஆனா, அதுக்காக அவர் அழலை. அப்பாவின் அரை ஏக்கர் நஞ்சை, ஒரு ஏக்கர் புஞ்சையை பங்குவெக்கிறதுல பிரச்சினை. புஞ்சையை அண்ணனுக்கும், நஞ்சையை இவருக்கும் கொடுத்தப்ப, “அதெப்படி? புஞ்சை ஒரு ஏக்கர், இது வெறும் அரை ஏக்கர்தானே? எனக்கு வேண்டாம்” என்றார். “சரிப்பா, நான் நஞ்சையை எடுத்துக்குறேன். நீ புஞ்சையை எடுத்துக்கோ”ன்னு அண்ணன் சொன்னப்ப, “ஆங், புஞ்சையை வெச்சி புல்லு புடுங்கவா? எனக்கு நஞ்சைதான் வேணும்” என்றார். “சரிப்பா, நஞ்சை, புஞ்சை ரெண்டையுமே சரி பங்கு வெச்சிடுவோம்”னு ஊர்க்காரர்கள் சொல்ல, “இருக்கிறதே, அரை ஏக்கர் நஞ்சைதான். அதை எப்படி பங்கு போடுறது? வேணாம்” என்றார் அந்தத் தம்பி, தங்கக்கம்பி. “திரும்பத் திரும்ப பேசுற நீ”ன்னு கிறுக்குப் பிடிக்காத குறையாக ஊர்ப்பெருசுகள் எல்லாம் ஓட்டம்பிடிச்சிருச்சி.

இவர் ஒரு செல்லக்கிறுக்கன்னா, அடுத்தாப்ல வாரவரு ஒரு காரியக் கிறுக்கன். மீசையை வானத்தப் பாத்து வளத்துவெச்சுக்கிட்டு, சாதிப் பெருமை பேசிக்கிட்டுத் திரிவாப்ல. பேர்தான் விவசாயி. ஆனா, மண்ணை வெட்டுனதவிட, காதலர்களை வெட்டிவிட்டதுதான் அதிகம். திடீர்னு, மெட்ராஸ்ல படிச்ச இவரோட பையன் வேற சாதிப் பொண்ணை காதலிச்சிட்டு, “கல்யாணம் பண்ணி வைங்கப்பா”ன்னு வந்து நின்னான். பெருசுக்கு வந்துச்சு பாருங்க கோவம். 

நாலஞ்சு தடிமாட்டை சென்னைக்கு அனுப்பி, “பொண்ணு வீட்டுக்காரங்களை எச்சரிச்சுட்டு வாங்கடா”ன்னாரு. போனவங்க, “அய்யா வீட்டுக்குள்ள விட மாட்டேங்குறாங்க”ன்னு போன் பண்ணிச் சொல்ல, “கதவை உடைச்சுட்டு உள்ளே போங்கடா”ன்னு உத்தரவு போட்டாரு. “அய்யா, நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண வீடு இல்ல இது. காம்பவுண்ட் சுவரே நம்ம மீனாட்சியம்மன் கோயில் கோட்டைச்சுவர் மாதிரி இருக்குது. வீடே ஒரு ஏக்கர் இருக்கும் போல. உள்ள நாலஞ்சு கார் நிக்குது. கேட் ஏறிக்குதிச்சா, வாட்ச்மேன்களே எங்களை சட்னியாக்கிடுவாங்க”ன்னு அவங்க சொல்லியிருக்காங்க. அடுத்த செகண்டே, “டேய் டேய் டேய், சம்பந்தி வீட்ல சத்தம் கித்தம் போட்டுறாதீங்கடா. பேசாம ஊருக்கு வாங்க பேசித் தீர்த்துக்குவோம்”னு முடிவை மாத்திருச்சி பெருசு. ஆனாலும், சாதியையும் விட முடியாம, வர்ற சொத்தையும் விட முடியாம அந்தாளு பட்ட அவஸ்தை தனிக்கதை.

மதுரையில் ஒரு பெரிய மனுஷன் இருந்தாரு. கழுத்துலயும், கையிலேயும் தேர்வடம் மாதிரி சங்கிலி, விரல்ல கேடயம் மாதிரி 4 மோதிரம் போட்டிருப்பாரு. மோதிரத்தைக் கழற்றாம சாப்பிடவோ, கை, கால் அலம்பவோ முடியாதுன்னா பாத்துக்கோங்களேன். ரெண்டு பொண்டாட்டி. ரெண்டு பேரையும் ரெண்டு கண்ணா பாவிச்சாரு. மூத்த சம்சாரத்துக்கு ரெண்டு,  இளைய சம்சாரத்துக்கு ரெண்டுன்னு பிள்ளைங்களைக் கூட சமமாத்தான் பெத்துக்கிட்டாரு. ஆனா, கடைசிக் காலத்துல சொத்துச் சண்டை வந்திருச்சி. விரக்தியில ராத்திரியோட ராத்திரியா அம்புட்டு நகையையும் கழற்றி பூங்கா முருகன் கோயில் உண்டியல்ல போட்டுட்டாரு. விஷயம் தெரிஞ்சதும், அவரே செத்துப்போனது மாதிரி ஒட்டுமொத்த குடும்பமும் ஐயோன்னு ஒப்பாரி வெச்சி அழ, “நான் உனக்கு என்ன குறைவெச்சேன்”னு ரெண்டு பொண்டாட்டியும் உலுக்கிட்டாங்க.

மனசு மாறி, கோயிலுக்குப் போன மனுஷன், அந்த நகையை திரும்பக் கேட்டிருக்காரு. அறநிலையத்துறை அதிகாரிங்க விழுந்து விழுந்து சிரிச்சிருக்காங்க. “யோவ் கோயில் உண்டியல்ல பணம் போடுறதும், கட்சிக்காரன் சம்பாதிக்கிறதும் ஒண்ணுய்யா. ஒன்லி ஒன்வே. திரும்ப வராது”ன்னு சொல்லியிருக்காங்க. “சரிங்க, உண்டியல் எண்ணும்போது சொல்லுங்க. என் பொண்டாட்டிகள கூட்டியாந்து கண்ணுலயாச்சும் காட்டுறேன். இல்லாட்டி, நான் இன்னொரு தொடுப்பு வெச்சிருக்கேன்னு சொல்லிடுவாளுக”ன்னு சொல்லி, அனுமதி வாங்குனாரு பெருசு.உண்டியல் திறக்கப்பட்டது. நெஞ்செல்லாம் படபடன்னு அடிக்க, ஒட்டுமொத்த குடும்பமும் உண்டியலையே உத்துப் பார்த்தது. அந்த வட மாலையை எடுத்துக் காட்டும்போதே மாரடித்து அழ ஆரம்பிச்சுது பெரிய மேடம். மோதிரத்தைப் பார்த்ததும் சின்ன மேடம், மயக்கம் போட்டு விழுந்திடுச்சி. வாரிசுங்க முகமும் வாடிப்போச்சு.

சமீபத்தில், மதுரையில் பழமையான தியேட்டர் சீல் வைக்கப்பட்டுச்சி, அதோட கதையும் கிட்டத்திட்ட இதேமாதிரிதான். அந்த இடத்துக்காரரு எப்பவோ பக்தி முத்திப்போய், இடத்தை மீனாட்சியம்மன் கோயில் பேருக்கு எழுதி வெச்சிட்டாரு. மனசு மாறி திரும்பக் கேட்டப்ப, “யோவ், கோயில் உண்டியல்ல பணம் போடுறதும், அறநிலையத்துறைட்ட நிலத்தைக்கொடுக்கிறதும் ஒண்ணு. குடுக்கலாமே தவிர, திரும்ப எடுக்க முடியாது”ன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப முட்டி மோதுனப்ப ஒரு வழி சொல்லிருக்காங்க. “இதே வருமானமுள்ள இன்னொரு இடத்தைக் கோயிலுக்குக் குடுத்திட்டு, இதைத் திரும்ப வாங்கிக்கலாம்”னு. அப்படிக் குடுத்துட்டு, பழைய இடத்துல தியேட்டர் கட்டுனாரு மனுஷன். கடைசியில, ஏதோ குண்டக்க மண்டக்க ஆகி ரெண்டு இடமும் அறநிலையத்துறைக்குப் போயிடுச்சி. தியேட்டரும் போயிடுச்சி.

திருநெல்வேலி மாவட்டத்துல ஒரு மைனாரிட்டி ரவுடி கடைசிக் காலத்துல, மனந்திருந்திட்டாரு. ‘பரலோக ராஜ்யத்து’க்கு டிக்கெட் ரிசர்வ் பண்றதுக்காக ஒரு பாதிரியார்கிட்ட ஐடியா கேட்டிருக்காரு. “சர்ச் கட்ட இடம் கொடுங்களே”ன்னு அவர் சொல்ல, ரோட்டு மேல இருந்த சமுக்கமான (சதுரம்) இடத்தை வாரி வழங்கிட்டாரு வள்ளலு. அங்கே சர்ச் கட்ட ஆரம்பிச்சப்பதான் பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு விஷயம் தெரிய வந்துச்சி. அவங்க சண்டைக்கு வந்ததும் ரவுடி போய் இடத்தைத் திரும்ப கேட்டிருக்காரு. “பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, இந்தப் பாவியை மன்னியும். அவர் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாத பாவி இவர்”னு பிரேயர் பண்ணி அவரை சாந்தப்படுத்தி அனுப்பிட்டார் பாதிரியார்.

ஆக, மனுஷனுக்கு கண்ணு , காது, கிட்னி மட்டுமில்ல... அப்பப்ப மனசும் ரெண்டுதான்!

x