நன்றே வாழ்தல்...


ஹரணி
uthraperumal@gmail.com

மழை வரும் போலிருந்தது. வானத்தில் இறைத்துவிட்டது போல மழை மேகங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. மழை வருவதற்குள் காய்ந்த துணிகளை எடுத்து வந்துவிட வேண்டும். இன்றோடு இது முடிந்துவிடும். நாளைக்கு மொட்டை மாடியும் துணிகள் காய வைப்பதும் இல்லை. நினைக்கவே மனதுக்குள் வேதனை வெப்பம் பரவியது கௌரியம்மாளுக்கு.

மாடிப்படியேறி இறங்க ஒரு மணிநேரம் எடுக்கிறது. ஒவ்வொரு படியிலும் காலை ஊன்றி ஏறும்போது முழங்காலில் முள்சீப்பால் வாரியது போன்ற வலி ஊறுகிறது. கடுக்கிறது. பகலில் நல்லெண்ணெய் தடவிக்கொள்வாள். இரவில் தடவ முடியாது. எறும்புகள் மொய்த்துவிடும்.

இரண்டு படிகள் கால் வைத்து நின்றதும் வலிக்கத் தொடங்கிவிட்டன இரண்டு முழங்கால்களும். லேசாக மூச்சும் வாங்கியது. வேறு யாரும் உதவ மாட்டார்கள் என்கிற நிலைப்பாட்டில் நிதானம் பிடித்து ஏறத் தொடங்கினாள். ஒருவழியாக மொட்டை மாடிக்கு வந்துவிட்டாள். அப்படியே உட்கார்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் மூடிபோல இரண்டு முழங்கால்களின் மேல் கவிழ்த்து மூடிக்கொண்டாள். லேசாகப் பிடித்து விட்டாள். வலிக்கு இதமாக இருந்தது.

எழுந்து ஒவ்வொரு துணியாக கிளிப்பை விடுவித்து எடுத்துக் கீழே போட்டாள். அரைமணி நேரமாயிற்று. கௌரியம்மாளின் கணவர் தியாகராசனின் வேட்டி, ஒரு பேன்ட் சட்டை, புடவை, ஜாக்கெட், உள்பாவாடைகள், இரண்டு கர்சீப்புகள் அப்புறம் சிறு பிள்ளைகளின் டிராயர், சட்டைகள் (பேரப்பிள்ளைகளுடையது).

மறுபடியும் உட்கார்ந்துகொண்டாள். 61 வயதாகிறது. ஓடிவிட்டன வருடங்கள். கைக்கும் வாய்க்கும் போதாமல் இரவும் பகலும் அலைந்தமேனியாக 61 வருடங்கள் நானும் வாழ்ந்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்வதுபோல ஓடிவிட்டன. கணவனாக வந்த தியாகராசன் மட்டுமே அவளுக்கு வாழ்நாள் முழுக்கக் கிடைத்த பயன். அரசுப் பணியில் இருந்தார். வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர். அதுவும் சொற்பச் சம்பளம்தான். யாரிடமும் கைநீட்டி பைசா வாங்க மாட்டார். ஆனால் எல்லாருக்கும் தன்னால் முடிந்த உதவியைச் செய்துவந்தார்.

x